/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பக்தர்களின் செல்லப்பிள்ளை பழனியாண்டவன்
/
பக்தர்களின் செல்லப்பிள்ளை பழனியாண்டவன்
ADDED : நவ 05, 2010 03:57 PM

போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான் பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு அருள்பாலிப்பதால் இத்தலத்திற்கு ''சித்தன் வாழ்வு''என்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் 'பழநியாண்டி' என்று அழைப்பர்.
நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாகவே தலவரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால், அவரை ராஜாங்க அடையாளத்துடன் பட்டுபீதாம்பரம், கிரீடம் அணிந்து ராஜாவாக மாற்றி விடுகின்றனர். பழநி முருகன் பக்தர்களின் செல்லப் பிள்ளையாயிற்றே!
மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாழ்வில் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆகவேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் இரவு பகல் போல மாறி மாறி உண்டாகின்றன. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம்,மொழி, மெய்யால் நல்லதையே சிந்திக்கவேண்டும். அதற்கான நல்லறிவை வழங்கும் ஞானபண்டிதனாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் முருகன். சூரனுக்கே அருள் செய்தவர். அவர் அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானாரா என்றால், நிஜத்தில் அப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டார். அதனால் தான் பழநி சென்று திரும்புபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். கந்தசஷ்டி விரத நன்னாட்களில் அந்த ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்தப் பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்துக்குள் செல்லும் நல்லருளும் பெறுவோம்.