
திருமணநாளைக் கொண்டாடும் தம்பதியர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாளை தரிசித்தால், தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.
தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பொதிகை மலைக்கு வந்தான். ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளைப் பூஜிக்க நினைத்தான். அவரது வராக அவதார சிலையை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் அந்த இடம் மறைந்துவிட்டது. ஒருசமயம் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள், நதிக்கரையில் புதைந்து கிடப்பதாகக் கூறினார். அவர் அரசனிடம் அதுபற்றி கூறவே, அவன் சிலையைக் கண்டுபிடித்து கோயில் எழுப்பினான்.
கல்யாண வரம்: ஆதிவராகர், பத்மபீடத்தில் மடியில் பூமாதேவியை அமர்த்தி காட்சியளிக்கிறார். எப்போதும் தாயாருடன் சேர்ந்திருப்பதால் இவர், 'நித்ய கல்யாணப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு 'கல்யாணபுரி' என்றும் பெயருண்டு. திருமணமாகாதவர்கள் உற்சவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபடுகிறார்கள். உற்சவருக்கு 'லட்சுமிபதி' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புதுமணத்தம்பதிகள் இங்கு சென்று வந்து வாழ்வைத் துவங்கலாம். திருமண நாளைக் கொண்டாடுவோர் இவரை வணங்குவதன் தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர்.
பூமாதேவியை மீட்க, சுவாமி வராக அவதாரம் எடுத்தார் என்பதால், பூமாதேவிக்கு தனி சன்னதி உள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இந்த சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடியுள்ளார். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருட சேவை செய்து வழிபடுகிறார்கள். ஒரு ஆண்டில் பலநாட்கள் இங்கு கருடசேவை நடக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், செல்வம் பெருகவும் இங்கு வழிபடுகிறார்கள்.
இரண்டு தரிசனம்: ஆதிவராகருக்கு தாமிரபரணி தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் காலையில் அர்ச்சகர்கள் மேளதாளம் முழங்க தாமிரபரணிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருவர். சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் இருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். தினமும் காலையில் இவருக்கு பூஜை நடக்கும். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். கோயில் மேல் சுவரில் மூல கருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனத்துடன், பூ ஆடை அணிவித்து பூஜை நடக்கும். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர், விஷ்வக்ஸேனர், ஆழ்வார்கள் சன்னதி இருக்கிறது. பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதி பின்புறம் இருக்கிறது. யானை, குதிரை வாகனங்களுடன் பீட வடிவில் சாஸ்தா இருக்கிறார்.
திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூர ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 35 கி.மீ.. பழைய பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7- 10.30 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.
போன்: 04634- 250 302.