
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சாரதா மாரியம்மன் கோயில் மிகச்சிறந்த நிச்சயதார்த்த தலமாக விளங்குகிறது. இங்கு நிச்சயதார்த்தம் செய்தால், மணமக்கள் பல்லாண்டு காலம் சவுக்கியமாக வாழ்வர் என்ற நம்பிக்கை உள்ளது.
தல வரலாறு: பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர்வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த வேப்பமரங்களின் நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அப்போது அசரீரி ஒலித்தது.
''குழந்தைகளே! நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம்'', என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி துகள் பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று, வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது.
''குழந்தைகளே! நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன், கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமின்றி என்னை வழிபட எங்கிருந்து யார் வந்தாலும் காப்பாற்றுவேன்,'' என்றது. சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். அதே நாளில் குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என ஊர் பெரியவர்கள் கனவு கண்டனர். இதையடுத்து, 1917ல் சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.
தல சிறப்பு: சுயம்புவாக தோன்றிய கல் வடிவ அம்மன் மூலஸ்தானத்தில் உள்ளது. குழந்தைகளுடன் முதன் முதல் பேசிய அம்பாள் என்பதால், குழந்தை வடிவத்தில் அம்மன் சிலை வடித்து, கல்லின் அருகில் பிரதிஷ்டை செய்துள்ளனர். குழந்தைகளுக்கான பிரச்னைகளுக்காக இவளை வணங்குகின்றனர். காலப்போக்கில் வீரபாண்டி கிராமம், நகரமாக மாறி தற்போது கோபி செட்டிப்பாளையம் என்ற பெயரில் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் 'டவுன் மாரியம்மன் கோயில்' என்று பெயர் மாற்றம் பெற்றது. 40 ஆண்டுகளுக்கு முன் சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில், இந்த அன்னை தோன்றியதால், அவரும் இங்கு வந்து வழிபட்டார். பின்னர் 'டவுன் மாரியம்மன்' என்ற பெயர் நீங்கி, 'சாரதா மாரியம்மன்' என்றழைக்கப்படுகிறது.
நிறம் மாறாத தேங்காய்: சுவாமிகள் அன்னையின் மூலஸ்தானத்தில் அமர்ந்து வழிபடும் போது, ''நீர் எனக்கு பூஜை செய்யும்போது பயன்படுத்திய இரண்டு தேங்காய்களை அங்கேயே வைத்துவிட்டு செல்லவும்,'' என ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி தான் பூஜித்த இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் 40 ஆண்டுகளாக சிறிது நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது.
நிச்சயதார்த்த வைபவம்: வரன் பார்க்கும் படலம் முடிந்ததும், நிச்சயதார்த்தம் செய்வதற்கு இரு வீட்டாரும் இங்கு வர வேண்டும். இரண்டு கூடைகளில் உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து அம்மன் முன்பு வைத்து பூஜித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், திருமாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தையோ, புதிய திருமாங்கல்யத்தையோ அம்பாளின் திருவடியில் வைத்து பூஜித்து எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால், மணமக்கள் நூறாண்டு காலம் சகல சவுபாக்கியங்களுடனும் குழந்தைச் செல்வங்களுடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.
கணவருக்கு பூஜை: சித்திரை மாதம் இங்கு நடக்கும் பூச்சாட்டு திருவிழாவின் ஏழாம் நாள் பால்மரம் என்று கூறப்படும் ஆலமரத்தின் இரு கிளை கொண்ட ஒரு பாகத்தை வெட்டி எடுத்து வருகின்றனர். அதில் துளையிட்டு அம்மன் திருவுருவம் செதுக்குகின்றனர். அக்கம்பத்தை அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு எடுத்து சென்று புனித நீர் ஊற்றி, பூஜை செய்து மீண்டும் கோயிலில் வந்து நடுகின்றனர். அந்த கம்பம் மகாமாரியம்மனின் கணவராகக் கருதப்படும். தினமும் காலை, மாலை பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, மாலையிட்டு சுற்றி வந்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திருமணத்தடை, பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இந்த அம்பாளுக்கு சரஸ்வதியின் மற்றொரு பெயரான 'சாரதா' என்ற பெயர் இருப்பதால், குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம். அம்மை குணமாக அம்பாளுக்கு வேப்பிலை வைத்து நீர் ஊற்றி வழிபடலாம்.
திருவிழா: சித்திரை கடைசி வியாழக்கிழமை ஆண்டு திருவிழா, அக்னி நட்சத்திர காலத்தில் பூச்சாட்டு விழா 17 நாட்கள்.
திறக்கும் நேரம்: காலை 7- பகல் 1 மணி, மாலை 4- இரவு 8 மணி.
இருப்பிடம்: ஈரோட்டிலிருந்து 35 கி.மீ.,. பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கடைவீதியில் கோயில் உள்ளது.
போன்: 98654- 09593.