ADDED : ஆக 21, 2020 03:25 PM

இயல்பு வாழ்க்கை திரும்பும்
செப்.1 செவ்வாயன்று மதியம் 2:05 மணிக்கு மிதுனத்தில் இருந்து ரிஷப ராசிக்கு ராகுவும், தனுசில் இருந்து விருச்சிக ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாக உள்ளனர். 2022 மார்ச் 21 மதியம் 3:01 மணி வரை இந்த ராசிகளில் தங்கியிருப்பர். ரிஷபத்தில் ராகு நீச பலத்தையும், விருச்சிகத்தில் கேது உச்ச பலத்தையும் பெறுகின்றனர்.
விருச்சிக ராசிக்கு கேது வருவதால் மருத்துவ உலகில் புரட்சி ஏற்படும். கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும். இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவர். இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேதம் எழுச்சி பெறும். மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு முறைகள், மருந்துகள் முக்கிய இடம் பிடிக்கும்.
ராகு, கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து நவ.15ல் குருப்பெயர்ச்சி, டிச.27ல் சனிப்பெயர்ச்சிக்குப் பின் அரசியல், பொருளாதாரம், மருத்துவ துறைகளில் புதிய மாற்றம் ஏற்படும். அடுத்த ஒரு ஆண்டுக்கு குரு நீசம் பெறுவதாலும், சனி ஆட்சி பலத்துடனும், கேது உச்ச பலத்துடனும் சஞ்சரிப்பதாலும் ராகு நீசம் பெற்று யுரேனஸ் உடன் இணைவதாலும் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் வரலாம். ராகு, கேது பெயர்ச்சியன்று உலக நன்மைக்காக வழிபடுவோம்.
ஹரிபிரசாத் சர்மா
98651 35565
வரப்போகுது தடுப்பு மருந்து
விஷ ஜந்து, கிருமிகள், தொற்றுநோய்க்கு காரணிகளாக இருப்பவர்கள் ராகு, கேது.
மருந்து, மூலிகைக்கு சம்பந்தப்பட்டவர் புதன். இதனால் மருத்துவ உலகிற்கு சவாலாக ராகு நெருக்கடியை ஏற்படுத்தினார். நிதி நிலைமையைக் குறிப்பவர் குருபகவான். அவரது வீட்டில் அவருடன் இருந்த கேதுவும், சனியும் பொருளாதாரத்தை உலுக்கத் தொடங்கினர். கடந்தாண்டு ஏற்பட்ட ஆறுகிரக கூட்டணியால் தான் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. சனி, கேது சேர்க்கை சுபகிரகமான குருவை ஸ்தம்பிக்க வைத்தது.
இப்போது கேது விலகுவது நிதி நிலைமைக்கு பலம் சேர்க்கும். புதனின் வீட்டை விட்டு ராகு நகர்வதோடு, சுக்கிரன் வீட்டில் அமர்கிறார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். நோயின் தீவிரம் குறையும். அடுத்த ஆண்டில் ரோகிணி நட்சத்திரத்துக்கு ராகு மாறும் போது கூடுதல் நன்மை கிடைக்கும். விரைவில் குருபார்வையை ராகு பெறவிருக்கிறார். இதனால் நிதி நிலைமை சீரடையும். கொரோனா பாதிப்பு மறையும்.
வேதா கோபாலன்
98841 56456
நிம்மதியான காலம் வருது!
தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவானின் பார்வை ரண, ருண ஸ்தானமான கன்னி ராசியின் மீது விழுவதால் கொரோனா நோய் உலகெங்கும் ஏற்பட்டுள்ளது. ராகு, கேதுவின் பிடியில் சிக்கி இருந்ததால் சுபகிரகங்களாலும் நன்மை தர இயலவில்லை. ஆக.29ல் புதன் கன்னி ராசிக்கு மாறிய பின் மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
செப்.1ல் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சிக்குப்பின் இறுக்கமான நிலை மாறி மக்கள் சற்று நிம்மதி காண்பர். தற்போது சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் சஞ்சரிப்பதால் நம் வாழ்வாதாரம் சிறக்க புதிய அறிவிப்பு வெளியாகும்.மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் குருபகவானின் 5ம் பார்வையை பெறுகிறார். இதனால் மருத்துவத்தில் முன்னேற்றம் ஏற்டும். விரைவில் தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும். 18 ஆண்டுக்கு பிறகு ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் சஞ்சரிக்க இருப்பதால் உலகளவில் மாற்றம் நடக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
78451 19542
இரண்டு ஆண்டு பாதிக்கும்
நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் மற்ற கிரகங்களை விட பலம் மிக்கவை. இதில் ராகு மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் காற்றில் பரவும் விஷத்தன்மையால் நோய் தொற்று பரவும். தற்போது கொரோனா என்னும் தொற்று நோயால் உலகமே அல்லல்படுகிறது. செப்.1ல் ரிஷப ராசிக்கு ராகுவும், விருச்சிக ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாக இருப்பதால் நோயின் தீவிரம் குறையும். ஆனாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்படப் போகும் கால சர்ப்ப தோஷத்தாலும், மகர ராசியில் சனிபகவான் செல்வதாலும் நோய் பாதிப்பு இரண்டு ஆண்டுக்கு தொடரும். நவ.15ல் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியான பின் மருந்து கண்டுபிடிக்கப்படும். இதன்பின் நோயின் கடுமை குறையும் சூழல் உருவாகும். அதுவரை அவரவர் இஷ்ட தெய்வம், நவக்கிரகங்களை வழிபடுவது நன்மை தரும்.
ரா. பார்த்தசாரதி
94442 56421