
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி சாத்தபுரம் அக்ரஹாரத்தில் பிரசன்ன மஹாகணபதி கோயில் உள்ளது. இங்கு சுவாமி தெற்கு நோக்கி இருக்கிறார்.
300 ஆண்டுக்கு முன் இப்பகுதியை ஆண்ட கேரள மன்னர்கள் தஞ்சை, மயிலாடுதுறையில் இருந்து அந்தணர்களை குடியமர்த்தினர். இங்குள்ள 18 அக்ரஹாரங்களில் சாத்தபுரம் அக்ரஹாரத்தில் மட்டும் கோயில் பூஜையை வைணவர்களும், பிற 17 அக்ரஹார கோயில்களில் சைவர்களும் பூஜை செய்கின்றனர். உற்ஸவர் சிலையை பிரதிஷ்டை செய்யும் போது சிற்பி செதுக்கும் முன்பே சுவாமியின் கண்கள் திறந்தது. கோயிலின் பின்புறம் ஓடும் நீளாநதியில் நீராடி சுவாமியை தரிசித்த பிறகே மக்கள் அன்றாட பணியை தொடங்குகின்றனர். தினமும் கணபதி ஹோமம், பாலாபிஷேகம் நடக்கும். மாதம் தோறும் சங்கடஹரசதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தியன்று சிறப்பு பூஜை நடக்கும்.
மஹா கணபதிக்கு சிதறுகாய் வேண்டுதல் வைத்தால் நினைத்தது நிறைவேறும். விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயிலின் பின்புறம் நாக சுப்ரமணியர், நாகர்கள் சன்னதிகள் உள்ளன. காஞ்சிபுரம், சிருங்கேரி மடாதிபதிகள் இக்கோயிலுக்கு வந்துள்ளனர்.
வைகாசி 14ல் கும்பாபிஷேக தினத்தன்று யானைகள் ஊர்வலம் நடக்கும். ஐப்பசி கடைசி வாரத்தில் தேர் திருவிழாவில் கல்பாத்தி காசி விஸ்வநாதர், சாத்தப்புரம் பிரசன்ன மஹாகணபதி, மந்தக்கரை மஹாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயணர் கோயில் தேர்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும்.
எப்படி செல்வது: பாலக்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகாசி 14ல் கும்பாபிஷேக தினம், விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி தேர்திருவிழா
நேரம்: காலை 6:30 - 9:30 மணி ; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 94956 57021
அருகிலுள்ள தலம்: கல்பாத்தி காசி விஸ்வநாதர் கோயில் 1 கி.மீ.,