/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
வன துர்க்கையை வழிபடுங்க! வளமாக வாழுங்க!
/
வன துர்க்கையை வழிபடுங்க! வளமாக வாழுங்க!
ADDED : மார் 29, 2016 01:57 PM

பிரிந்த தம்பதி ஒன்று சேர்ந்து வளமோடு வாழ, ராமனின் மகனான லவன் அமைத்த லவபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம், சென்னை கோயம்பேட்டிலுள்ள இந்தக் கோவிலில் அகத்தியர் வழிபட்ட வனதுர்க்கை சன்னிதி உள்ளது.
தல வரலாறு: பட்டாபிஷேகத்துக்கு பிறகு, விதிவசத்தால் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு ஆளானார் ராமர். கர்ப்பவதியான அவளை லட்சுமணன் காட்டில் கொண்டு வந்து விட்டான். காட்டில் தனித்து நின்ற அவளுக்கு, வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்தில் லவன், குசன் என்ற குழந்தைகள் பிறந்தனர்.
ராவணனைக் கொன்ற பாவம் நீங்க, ராமேஸ்வரத்தில் ராமர் சிவலிங்க பூஜை செய்தது போல, அவரது குழந்தைகளும் ஒருசமயம் மண்ணால் சிவலிங்கங்கள் அமைத்தனர். குசன் ஸ்தாபித்த சிவலிங்கத்திற்கு குசலபுரீஸ்வரர் என்றும், லவன் ஸ்தாபித்த லிங்கத்திற்கு லவபுரீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றுக்கு சொந்தமான கோவில்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ளன. குசன் அமைத்த லிங்கம் சிறிதாகவும், லவன் வடித்த லிங்கம் சற்று பெரிதாகவும் அமைந்தன. குசலபுரீஸ்வரரை சூரியனும், லவபுரீஸ்வரரை சந்திரனும் வழிபட்டுள்ளனர்.
வனதுர்க்கை: கயிலையில் நடந்த சிவ பார்வதி திருமணத்தின்போது உலகை சமன் செய்ய அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். வழியில் விந்திய மலை மிக உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த மலையின் உயரம் காரணமாக கால கணக்கையே நடத்த இயலாத நிலை உருவானது. அந்த மலையில் வசித்த விந்தியன் என்ற அசுரனை அடக்கினால் இந்த நிலையைத் தவிர்க்க முடியும் என்பதால், அகத்தியர் பராசக்தியின் அம்சமான துர்க்கையை வணங்கினார். அவர் வழிபட்ட துர்க்கைக்கு ''வன துர்க்கை'' என பெயர் வந்தது. இந்த துர்க்கை லவபுரீஸ்வரர் கோவிலில் அருளுகிறாள்.
இந்த துர்க்கையே சீதை மற்றும் லவகுசர் பசி நீக்க மதுரமான நெல்வயலை உருவாக்கினாள். இந்த இடமே 'மதுரவாயல்' எனப்படுகிறது. விளைந்த நெற்கதிர்கள் குன்றுபோல் சேமித்து வைத்த இடமே 'நெற்குன்றம்'. வானவர்கள் (தேவர்கள்) வந்து தங்கி கைலாசநாதரை வழிபட்ட இடமே 'வானகரம்'. சிவபூதணங்கள் தங்கியிருந்த இடம் 'சிவபூதம்'. எவருக்கும் அஞ்சாத வாலி பூஜித்த தலமே வாலீஸ்வரர் கோவில். இங்கு வந்த வாலி தங்கிய இடம் 'ஓடான் அஞ்சிமேடு' எனப்பட்டு, தற்போது ''ஓட்டாங்கச்சிமேடு'' எனப்படுகிறது.
குசன் உருவாக்கிய குசலபுரியில் (கோயம்பேடு) அமைந்த குசலபுரீஸ்வரர் கோவிலில் சிவனுடன் அறம்வளர்த்த நாயகி (தர்மசம்வர்தினி) காட்சி அளிக்கிறாள். லவன் உருவாக்கிய லவபுரீஸ்வரர் கோவிலில் அழகம்மை (சவுந்தரவல்லி) அருள்பாலிக்கிறாள். இந்தக்
கோவிலிலுள்ள வன்னி மரத்தின் எதிரே வனதுர்க்கை சன்னிதி உள்ளது. இவளுக்கு ராகு காலத்தில் நெய் விளக்கு ஏற்றி பூஜிக்கிறார்கள். கணவனை பிரிந்து வாழும் நிலையில் உள்ள பெண்கள் ஐந்து ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் பூஜை செய்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., லவபுரீஸ்வரர் கோவில் அருகிலேயே குசலபுரீஸ்வரர் கோவிலும் உள்ளது.

