/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திர முருகன்
/
செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திர முருகன்
ADDED : டிச 24, 2010 03:23 PM

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சென்னை அருகிலுள்ள போரூர் கந்தசுவாமி சுவாமி கோயிலில் உள்ள, யந்திர வடிவ முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து தோஷம் நீங்கப்பெறலாம்.
தல வரலாறு: முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை 'சமராபுரிவாழ் சண்முகத்தரசே' எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர்.
யந்திர முருகன்: கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக 'சுப்பிரமணியர் யந்திரம்' பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த யந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
சிறப்பம்சம்: முருகன் சன்னதி சுவரில் 'குக்குடாப்தஜர்' (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. அதாவது, சேவலைக் கையில் வைத்திருக்கும் முருகன் என்று இதற்குப் பொருள். பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
மும்மூர்த்தி அம்ச முருகன்: பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் விளங்குகிறார்.
அபிஷேகம் இல்லை: கந்தசுவாமி இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருளுகிறார். கோயில் அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகனுமாக அமைந்த தலம் இது. முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சாத்துகின்றனர்.
மருமகள்களுக்கு நவராத்திரி: அம்பாளுக்கே நவராத்திரி விழா நடத்துவது வழக்கம். ஆனால், இங்கு அவளது மருமகள்களான வள்ளி தெய்வானைக்கு நவராத்திரி நடத்துகின்றனர். சிவனுக்குஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்துவர். இங்கு கந்தசுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரியன்று இரவில் நான்கு கால பூஜை நடப்பதும் விசேஷம். இங்குள்ள அம்பிகை 'புண்ணியகாரணியம்மன்' எனப்படுகிறாள்.
பனை பாத்திரம்: இத்தலத்தில் முருகன் சிலை கண்டறியப்பட்டபோது, அது ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். அள்ளஅள்ளக் குறையாத அட்சயபாத்திரம் போல இந்தப் பானை செல்வத்தை தருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.
இருப்பிடம்: சென்னையிலிருந்து 40 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ., தூரம். அருகில் மாமல்லபுரம் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 6- 12.30 மணி, மாலை 3.30- இரவு 9 மணி.
போன்: 044- 2744 6226.