ADDED : ஜன 27, 2013 05:25 PM

வடலூர் கருங்குழியிலுள்ள ரெட்டியார் வீட்டில் வள்ளலாருக்கு ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருமுறை, ரெட்டியாரின் மனைவி முத்தியாலு அம்மா வெளியூர் கிளம்பினார். வள்ளலார் அறையில் இரவில் விளக்கெரிய வேண்டுமென்பதால், ஒரு கலத்தில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்தார். இன்னொரு கலத்தைப் பழக்கப் படுத்த வேண்டும் என்பதற்காக அதில் தண்ணீர் நிரப்பியிருந்தார். இரண்டும் அருகருகே இருந்தன. மறுநாள், திரும்பி வந்த அவர் விளக்கில் தண்ணீர் இருப்பதைக் கண்டார். எண்ணெய் கலத்தில் சிறிது கூட எண்ணெய் குறையவில்லை. எந்தக் கலத்தில் இருந்து எண்ணெய் விட்டீர்கள் என்று கேட்டதற்கு தண்ணீர் கலத்தைக் காட்டினார் வள்ளலார். இந்த அற்புதத்தை மற்றவர்களிடம் சொல்ல முத்தியாலு அம்மா கிளம்பிய போது, ''என்னால் ஏதும் நடக்கவில்லை. இறைவன் சந்நிதியில் தண்ணீர் விளக்கும் எரிந்தது,'' என்று பதிலளித்தார் வள்ளலார்.

