
'கடிகை' என்ற ஒரு சொல்லை அடிப்படையாகக் கொண்டு, சில தகவல்களை உங்களுக்குச் சொல்கிறோம். ருசிகரமான இதை படிப்போமா!
மாணவர்களே! பெற்றவர்களுக்கு கஷ்டம் தராதீர்!
அக்காலத்தில் பள்ளிகளை 'கடிகா ஸ்தானம்' என்றனர். பின் வித்யாசாலை ஆனது. இப்போது கூட 'வித்யாலயம்' என்ற பெயரில் பள்ளிகள் உள்ளன. தமிழில் பள்ளிகளை 'கடிகை' என்பர். ஒரு காலத்தில் குருகுலப்பள்ளிகள் இருந்தன. இங்கு வேதம், அறிவியல், வானவியல், ஜோதிடம், வீர வித்தைகள் கற்றுத்தரப்பட்டன.
கடலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள திருவல்லம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் ''இந்த தர்மத்துக்கு ஹானி(துன்பம்) உண்டாக்குபவன் கடிகையிலுள்ள ஏழாயிரம் பேரையும் கொன்ற பாவத்துக்கு ஆளாவான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அக்காலத்தில் இப்பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் 7ஆயிரம் பேர் படித்துள்ள விபரம் தெரிய வருகிறது. கல்விக்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் இருந்துள்ளது. மாணவர்கள் இதையெல்லாம் உணர்ந்து, பெற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல், தாங்களாகவே படித்து முன்னுக்கு வர வேண்டும்.
பானை கடிகாரம்
அந்தக் காலத்தில் 'கடிகை' எனப்படும் சிறிய பானையைப் பார்த்து நேரம் சொன்னார்கள். அடியில் சிறுதுளையிட்ட பானையில் நீர் நிரப்பி,தொங்க விடுவார்கள். அதில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுவதைக் கணக்கில் கொண்டு நேரம் கண்டுபிடித்தார்கள். அப்போது நேரத்தை 'நாழிகை' அடிப்படையில் கணிப்பது வழக்கம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். 'கடிகை' என்ற சொல்லுக்கு 'நாழிகை' என்றும் பொருள் உண்டு. 'கடிகை' என்ற சொல் 'கடிகா' ஆக திரிந்து, இப்போது 'கடிகாரம்' ஆகியுள்ளது.
நரசிம்மர் கோயிலில் கடிகை
வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தலத்தை சோளசிம்ஹபுரம் என்று முற்காலத்தில் அழைத்தனர். பிறகு 'சோளலிங்கபுரம்' ஆகி, சோளிங்கர் ஆகி விட்டது. இங்குள்ள மலையை 'கடிகாசலம்' என்பர். 'கடிகா' என்றால் 'நாழிகை'. 'சலம்' என்றால் 'மலை'. இங்குள்ள நரசிம்மரை வணங்கி, ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கினாலே போதும். அங்குள்ள நரசிம்மரின் அருளால் எல்லா நன்மைகளும் கிடைத்து விடும். தீயசக்திகள் பறந்து விடும்.
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை என்ற நூலை எழுதியவர் விளம்பி நாகனார். இதில் வரும் 'கடிகை' என்ற சொல்லுக்கு 'சிறு துண்டு' என பொருள். நான்கு மணியான உபதேசங்களைக் கோர்த்து செய்யப்பட்ட செய்யுள்களைக் கொண்டது என்பதால் 'நான்மணிக்கடிகை' என்று பெயர் வந்தது.