
ராமாயணத்தில் வரும் மூன்று தலைநகரங்கள் அயோத்தி, கிஷ்கிந்தை, லங்காபுரி. இம்மூன்றையும் ஆண்ட மன்னர்கள் மூவருமே காமவலையில் சிக்கி தொல்லைக்கு ஆளானார்கள். தசரதன் தன் இரண்டாவது மனைவியிடம் அளவுகடந்த மோகம் வைத்தான். வரம் கொடுப்பதாக வாக்களித்தான். அவ்வரமே ராமனைக் காட்டுக்குச் செல்ல வைத்தது. காட்டுக்குச் சென்ற ராமன், கிஷ்கிந்தைக்குச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்தான். அவனது மனைவியை அண்ணன் வாலி கடத்தி வைத்திருந்தான். ராமபிரான் வாலியைக் கொன்றார். அவனது உதவியுடன் ராமன் இலங்கை சென்றான். காமநோயால் மாற்றான் மனைவியான சீதை மீது ஆசை கொண்ட ராவணனை அங்கு கண்டான். இந்த மூன்று பேரும் காமத்தால் அழிந்தவர்கள். இவர்களுக்கு நேர் எதிர்நிலையில் ராமபிரான் காட்சி தருகிறார். இத்தனைக்கும் ராமன் முற்றும் துறந்த முனிவர் அல்ல. ஏகபத்தினி விரதத்தை ஏற்று சீதையோடு இல்வாழ்வு நடத்தியவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். அந்த ஒழுக்கமே இன்று வரை அவரது புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.