
எவ்வளவு உழைத்தாலும் பணம் தங்கமாட்டங்குது. கை, காலெல்லாம் வலிக்குது. மனசும் சரியில்ல. பொண்ணு, பையனுக்கு வயசு போகுது. இன்னும் குருபார்வை கிடைக்கலயே. இதனால் கல்யாணம் தள்ளிப்போகுதே என கவலைப்படுகிறீர்களா. முதலில் கவலையை விட்டொழியுங்கள்.
நல்லதே நடக்கும் என நம்பிக்கை வையுங்கள். மேலும் குருவாகிய மகான்களின் அருள்பார்வை பட்டால் உங்கள் கஷ்டம் எல்லாம் பறந்துபோகும். இதற்கு சான்றாக பலரும் இருந்துள்ளனர்.
* சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் 'எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிக்கி வந்தனமுலு' என்ற பாடலில் இவ்வுலகில் பிறந்த அத்தனை மகான்களையும் வணங்குகிறேன் என போற்றியுள்ளார்.
* வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டத்தை வணங்குகிறேன் என்கிறார் முருகனின் அடியாரான வள்ளலார் சுவாமிகள்.
* எவ்வளவு பெரிய கர்மவினையாக இருந்தாலும் அதைப் போக்கும் ஆற்றல் மகான்களுக்கும், அவர்களது பார்வைக்கும் உண்டு என சொல்கிறார் தமிழ் தாத்தாவான உ.வே.சாமிநாத ஐயர். இவர் திருநெல்வேலி கோடகநல்லுார் சுந்தரசுவாமிகள், திருவண்ணாமலை ரமணர், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள், காஞ்சி மஹாபெரியவர், கிருபானந்தவாரியார் ஆகியோரை தரிசித்துள்ளார்.
அவர்கள் இப்போது இல்லையே என வருத்தப்படாதீர்கள்.
அவர்கள் செய்த உபதேசங்களை படியுங்கள். அவர்களைப்போல் கோயில், மடத்திற்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள். மகான்களின் அதிஷ்டானம், ஜீவசமாதி அடைந்த இடத்திற்கு செல்லுங்கள். இயலாதவர்கள் அவர்களது பெயர்களை தினமும் சொல்லுங்கள். இப்படி செய்தால் குருவின் பார்வையால் துன்பம் யாவும் தொலையும். இன்பம் பெருகும்.
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.