
சத்திய க்ஷேத்திரம் எனப்படும் திருமயம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. சத்தியமூர்த்தி, அனந்த சயனமூர்த்தி என்ற இரு மூலவர்கள் இங்குள்ளனர். இதில் அனந்தசயன மூர்த்தி குகைக்கோயிலின் மூலவராக இருக்கிறார். கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேய மகரிஷி, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், கின்னரர்கள் பெருமாளைச் சுற்றி இருக்கின்றனர்.
பாற்கடலில் பெருமாள் நித்திரையில் இருக்கும்போது ஒரு சமயம் மது, கைடபர் என்னும் அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவியை கடத்தினர். அரக்கர்களுக்கு அஞ்சிய பூதேவி, பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்தனர். பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாத ஆதிசேஷன், தன் வாயில் இருந்து விஷ ஜுவாலையை கக்கி அரக்கர்களை விரட்டினார். நித்திரை கலைந்த பிறகே பெருமாளுக்கு இந்த விஷயம் தெரிய வர, ஆதிசேஷனின் செயலைப் பாராட்டினார்.
இந்த வரலாற்றை அப்படியே சித்தரிக்கும் விதத்தில் கருவறை உள்ளது. மனநிலை சரியில்லாதவர்கள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இங்குள்ள உஜ்ஜீவனவல்லி தாயாரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.