ADDED : நவ 17, 2023 01:20 PM

பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை என பல சிறப்புகளை கொண்டது பழநி. இது முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாவது தலமாக உள்ளது. நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நுாலில் 'திருவாவினன்குடி' என இத்தலத்தை போற்றியுள்ளார்.
இங்கு மலையடிவாரத்தில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து 'குழந்தை வேலாயுத சுவாமி' என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.
சுவாமி குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவபெருமானின் அம்சம் என்பதால் கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் உள்ளனர். இங்கு உற்ஸவ மூர்த்தியாக இருக்கும் 'முத்துக்குமாரசாமி' திருவிழாக் காலங்களில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.