ADDED : நவ 17, 2023 01:25 PM

கந்தசஷ்டிக்கு முன்தினம் உடல் முழுவதும் வியர்வை சிந்தும் வேலவனைக் காண வேண்டுமா... நாகப்பட்டினம் மாவட்டம் நவதீதேஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள். இங்கு சிவனும், பெருமாளும் ஒரே கோயிலில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள அம்மனிடம் வேல்வாங்கிதான் முருகப்பெருமான் சூரனான சூரபத்மனை அழித்தார். இதனால் இங்கு அம்மனுக்கு 'வேல்நெடுங்கண்ணி' என்ற பெயர் உண்டானது.
'சிக்கல் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் வேல் வாங்கி சம்காரம்' என்ற பழமொழி இதனால்தான் உருவானது. சூரசம்காரம் முதல்நாள் இரவு வேலவன் தாயிடம் வேல்வாங்கும்போது நிகழ்ச்சியில் அவருக்கு வியர்க்கும். வியர்வை துளிகள் முத்து முத்தாகக் காட்சி தரும்.
இத்தலத்திற்கு ஏன் சிக்கல் என பெயர் வந்தது தெரியுமா... தேவலோகத்தில் இருக்கும் காமதேனு பசு பஞ்ச காலத்தில் மாமிசம் சாப்பிட்டது. இதையறிந்த சிவபெருமான் பசுவை புலியாக மாறும்படி சபித்தார். வருந்திய பசு மன்னிப்பு கேட்கவே அவர், ''பூலோகத்தில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள சுவாமியை பூஜித்தால் சாபம் விலகும்'' என்றார். அதன்படி பசு இங்கு வந்து குளம் அமைத்து நீராடியபோது, அதன் மடியில் இருந்த பால் பெருகி குளம் முழுவதும் பால் பொங்கியது. இதனால் குளம் பாற்குளமானது. தேங்கிய பாற்குளத்திலிருந்து வெண்ணெய் திரண்டது.
சிவபெருமானின் ஆணைப்படி வசிஷ்டர் இங்கு வந்து வெண்ணெய் மூலம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். இதனால் சுவாமி 'வெண்ணெய் நாதர்' ஆனார். வழிபாடு முடிந்தவுடன் இந்த லிங்கத்தை பெயர்த்து எடுக்கும்போது அது வராமல் சிக்கலை ஏற்படுத்தியதால் இத்தலம் 'சிக்கல்' என்றானது. சுவாமியை வணங்கினால் சிக்கலை தீர்த்துவைப்பார்.