
பிப்.19, 2024 - திருக்கச்சிநம்பி திருநட்சத்திரம் - மாசி மிருகசீரிடம்
சென்னை அருகில் உள்ள திருத்தலம் பூந்தண்மலி. (தண் - குளிர்ந்த, பூ - மலர்,
மலி - நிறைந்த இடம்) குளிர்ச்சி மிக்க பூக்கள் விளைந்த இப்பகுதி தற்போது 'பூந்தமல்லி' எனப்படுகிறது.
முன்பு பெருமாள் பக்தர்களான வீரராகவர், கமலாயர் தம்பதியருக்கு திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார், கஜேந்திரதாசர் என்னும் நான்கு குழந்தைகள் இருந்தனர். முதல் மூவரும் தொழிலில் ஈடுபட்டனர். நான்காவதான கஜேந்திரதாசர் பக்தராக இருந்தார். பணம், சொத்துக்களை குழந்தைகளுக்கு பிரித்துக் கொடுத்தார் தந்தை வீரராகவர். அதில் நிலம் வாங்கிய கஜேந்திரதாசர் நந்தவனம் அமைத்து பூக்களை மாலையாகக் கட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். இத்துடன் 'ஆலவட்டம்' என்னும் விசிறி சேவையும் செய்தார். சிலை வடிவில் நின்ற வரதராஜருடன் பேசும் பாக்கியமும் பெற்றார். மக்கள் இவரை 'திருக்கச்சி நம்பிகள்' என அழைத்தனர். இவர் மகான் ராமானுஜருக்கு குருநாதராக இருந்து உபதேசம் செய்தார்.
'பாவம், புண்ணியம் என்னும் சுழலில் சிக்கித் தவிக்கும் ஜீவாத்மா ஈடேற என்ன செய்யலாம்' என்ற கேள்வி ராமானுஜரின் மனதில் எழுந்தது. குருநாதரான திருக்கச்சி நம்பிகளிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். 'தாங்கள்தான் ராமானுஜனுக்கு வழிகாட்டி அருள வேண்டும்' என வரதராஜப்பெருமாளிடம் கேட்டார் நம்பிகள். அப்போது ஆறுவார்த்தைகளை வழங்கினார் வரதராஜர்.
1. அஹமேவ பரம் தத்வம் - நானே பரம்பொருள்.
2. தர்சனம் பேத ஏவ - ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
3. உபாயம் ப்ரபத்தி - சரணடைவதே என்னை அடையும் வழி.
4. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் - சரணடைந்தவர் இறுதிக் காலத்தில் என்னை மறந்தாலும் பரவாயில்லை.
5. தேஹாவஸானே முக்தி - உடலில் இருந்து ஜீவன் விடுதலை பெறுவதே மோட்சம்.
6. பூர்ணாசார்ய ஸமாஸ்ரயே - பெரியநம்பிகள் என்னும் அடியவரை குருநாதராக ஏற்றுக் கொள். கடவுளை அடைய குருவருள் அவசியம்.