ADDED : பிப் 23, 2024 11:41 AM

'சென்றாடும் தீர்த்தம் ஆனார் தாமே' என சிவனை போற்றுகிறார் திருநாவுக்கரசர். 'மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே' என தாயுமானவர் பாடுகிறார். தீர்த்தங்களில் நீராடி சுவாமியை தரிசித்தால் நல்ல குருநாதர் கிடைப்பார் என்பது பொருள். வடக்கே ஓடும் கங்கையிலும், தெற்கே ஓடும் காவிரியிலும் வாழ்வில் ஒரு முறையாவது நீராடி விஸ்வநாதர், ரங்கநாதரை வழிபடுவது நம் மரபு.
மாசிமகத்தன்று தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. இந்நாளில் தான் உலகை காக்கும் அம்பிகை அவதரித்தாள். தந்தையான சிவபெருமானுக்கு முருகன் உபதேசித்தார். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனிடம் இருந்து பூமியை மீட்டதும் இந்நாளில் தான். கும்பகோணம், ராமேஸ்வரம், பவானி, திருச்செந்துார், கன்னியாகுமரி போன்ற தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடி வழிபடுவர். இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் புனித நீராடும் வழக்கம் உள்ளது.
பழமையான புனித குளம் ஒன்று இந்தோனேஷியாவின் பாலித்தீவில் 'தம்பக் சிரிங்கி' என்னும் இடத்தில் இந்திரனுக்கு கோயில் உள்ளது. உடல், உள்ளம் துாய்மை பெற இக்குளத்தில் நீராடி வழிபடுகின்றனர்.
தேவர் தலைவனான இந்திரன் வஜ்ராயுதத்தால் பூமியில் ஒருமுறை துளையிட்ட போது தண்ணீர் பீறிட்டது. அதில் தேவலோக படைவீரர்கள் நீராடி வலிமை பெற்றனர். நீரைக் குடித்த போது புத்துணர்வும் பெற்றனர். இதனடிப்படையில் 'ஜெயசிகா வர்மதேவா' என்னும் மன்னர் 'தீர்த்தாரி ஏர் ஹம்புல்' என்னும் பெயரில் புனித குளத்தை உருவாக்கினார். தற்போது 'தீர்த்தா ஏர் அம்புல்' எனப்படுகிறது. மசூலா, மசூலி ஆகிய மன்னர்களின் காலத்தில் குளத்தின் அருகில் இந்திரனுக்கு கோயில் கட்டப்பட்டது. இது 'புனித வசந்த் கோயில் எனப்படுகிறது. இங்குள்ள குளம் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
* 'மெலுகட்' எனும் முதல் குளத்தில் இறப்புச் சடங்குகள், திதி, தர்ப்பணம் செய்கின்றனர்.
* 'செபல்' எனும் இரண்டாம் குளத்தில் நோயற்ற வாழ்வு பெறவும், எதிர்மறை எண்ணங்கள் அகலவும், துரதிஷ்டம் விலகவும் நீராடுகின்றனர்.
* 'தீர்த்தா ஏர் அம்புல்' எனும் மூன்றாம் குளத்தில் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கவும், நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் வாழவும் நீராடுகின்றனர்.
-வி.ராமசுப்பு