
தேனே வருக சீராசைத்
திருவே வருக திரிநேத்திர
சிவசங்கரருக்கு உவகை நல்கும்
செல்வக்கனியே வருக விண்ணின்
ஆனே பரவத் தவம்புரியும்
அமுதே வருக குமுதவாய்
அனமே வருக வினை இருளை
அவிக்கும் கிரணக் கதிர் வருக
பால் நேர் மொழிப் பார்வதி வருக
பனி மாமலையின் சேய் வருக
பன்னாகங்கள் இரண்டும் வழிபாடு
புரியும் புன்னை வன
மானே வருக உயிர் அனைத்தும்
வளர்க்கும் அனையே வருகவே
மன்றல் கமழு மலர்க் குழல்
கோமதியே வருக வருகவே..
எந்தச் செயலைத் தொடங்கினாலும் நாக தோஷத்தால் தடைகள் ஏற்படுகிறதே என வருத்தப்படுவரா நீங்கள்.... அப்படியானால் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியம்மனை சரணடையுங்கள். கோமதி' என ஒருமுறை அழைத்தாலும் போதும். குறையனைத்தும் தீரும்.
இத்தலத்தில் சங்கன், பதுமன் என்னும் நாக அரசர்கள் வழிபட்டு சங்கர நாராயணரை தரிசிக்கும் பேறு பெற்றனர். தூய சிநதனையுடன் இருப்பிடத்தில் இருந்து இக்கோயிலை மனதால் நினைத்தாலும் நாகதோஷம் மறையும்.
இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊற்றுமலை ஜமீனிடம் புலவராக இருந்தவர் புளியங்குடி முத்தவீரப்பக் கவிராயர். சீவல மாற பாண்டியன் என்னும் மன்னரால் இயற்றப்பட்டு முழுமை பெறாமல் இருந்த கோயில் புராணத்தை கவிராயரே பாடி முடித்தார்.
கோமதியம்மனை தரிசித்த பின், எந்த மனிதரையும் பார்க்க மாட்டேன்' என வரம் பெற்றார். இதனால் இமைகள் வேகமாக வளரவே இவரது கண்கள் மூடிக் கொண்டன. இவர் இயற்றிய கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்' பாடலை பாடினால் விருப்பம் நிறைவேறும்.