தீபாவளி கழிந்து வரும் வளர்பிறை பிரதமை திதியன்று அதிகாலை 4:30 - 6:00 மணிக்குள் நீராடி காப்பு கட்டி வழிபாட்டை தொடங்க வேண்டும். அன்று முதல் சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இந்நாட்களில் பால், பழம் சாப்பிட்ட காலம் ஒன்று உண்டு. இப்போது சர்க்கரை உள்ளிட்ட பசி தாங்க முடியாத வியாதிகள் முற்றி விட்ட நிலையில், அவரவர் உடல்நிலைக்கேற்ப உணவு எடுத்துக் கொள்ளலாம். 'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்' என்ற முன்னோர் சொல்படி, மனதில் முருகப்பெருமான் நிறைந்திருக்க வேண்டியது தான் முக்கியமே தவிர, உணவு ஒரு பொருட்டல்ல.உடல் பலம் உள்ளவர்கள் மதியம் ஒரு வேளை எளிய உணவு சாப்பிடலாம். மற்ற நேரங்களில் பால், பழம் எடுத்துக் கொள்ளலாம். முருக மந்திரங்களான 'ஓம் சரவணபவ' 'ஓம் முருகா' ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டும்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஆகியவற்றைப் படிக்கலாம். மாலையில் முருகன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மலைக்கோவிலாக இருந்தால் கிரிவலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். இந்த ஆண்டு அக்.31ல் தொடங்கும் விரதம் நவ.5ல் நிறைவடைகிறது.

