
ராமானுஜர் கீதை சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் கிளம்பும் போது பக்தர் ஒருவர், “சுவாமி! பகவானை அடைய, ஆசைகளைவிடவேண்டும் என்றகருத்தைமதிக்கிறேன். நானும்உங்களோடு வருகிறேனே,” என கேட்டார்.
உடனே ராமானுஜர், “கீதை கேட்டும் நீர் திருந்தவில்லையே!” என்றார். கேள்வி கேட்டவர் குழம்பினார்.
அதைப் புரிந்து கொண்ட ராமானுஜர், “நீர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவரவருக்குரிய கடமையை செய்ய வேண்டும் என கிருஷ்ணர் சொல்கிறார். நீர் துறவியானால், குடும்பத்தை காப்பது யார்? அவர்களை பகவான் பார்த்துக் கொள்வார் என்று நீர் சொல்லலாம். ஆனால், உமக்கு விதித்த கடமையில் இருந்து தவறுகிறீரே! “எல்லா கடமைகளையும் விட்டு விட்டு நீ என்னைப் பின்பற்று” என்று கிருஷ்ணர் சொன்னதன் அர்த்தம் இதுவல்ல. ''உன்னால் செய்ய முடியாத தர்மங்களை விட்டு விடு'' என்று தான் அர்த்தம். எனவே, நீர் வர வேண்டாம்,” என்றார். புறப்பட்டவர் உண்மையை உணர்ந்து ராமானுஜரை வணங்கினார்.