ADDED : ஜூலை 08, 2014 02:10 PM

நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவதென்பதே ரொம்பவும் குறைந்து விட்டது. இந்த சமயத்தில், எல்லாவற்றையும் மறந்து, நாலு நல்ல வார்த்தையைக் கேட்போமே!
இறைவன் எவர்களுக்கு உதவ ஒடி வருகிறான் என்று நம் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று, நம் பெரியவர்கள் ஒரு ஸுபாஷிதம் (நல்ல வார்த்தைகள் கொண்ட ஸ்லோகம்) மூலம் சொல்லியுள்ளார்கள்.
உத்யம:, ஸாஹஸம், தைர்யம், புத்தி: சக்தி: பராக்கிரம:
ஷடேதே யத்ர வர்தந்தே, தத்ர தேவ: சஹாயக்ருத்
இதன் பொருள் தெரியுமா?
உட்கார்ந்தால், உட்கார்ந்த இடத்திலேயே இருக்கும் சோம்பேறிக்கும், உதவாக்கரைக்கும், வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவனுக்கும், எவருமே - ஏன் - கடவுள் கூட உதவ முன் வரமாட்டார். எவரிடம் ஆறு குணங்கள், அதாவது, உத்யம- சுறுசுறுப்பாக உழைத்தல், பெரு முயற்சி செய்தல், ஸாஹஸம் -எடுத்ததை முடித்தல், தைர்யம் - வீரம், புத்தி - அறிவு நுட்பம், சக்தி - ஆற்றல், பராக்கிரமம் - துணிச்சல் ஆகியவை இருக்கின்றவோ, அந்த முயற்சி வெற்றியடைய, கடவுளே ஆசிர்வாதத்துடன் அங்கு வந்து உதவுவதற்கு ஆஜர் ஆகிவிடுவார்.
உதாரணத்திற்கு, அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா எவ்வளவு உதவி செய்தார்?
சோம்பேறியாக இருக்கும் எந்த மனிதனுக்கும் வெற்றி கிடைக்காது. எந்த மனிதன், வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன், எதிர் நோக்கி, கடும் முயற்சி செய்து, தன்னுடைய மூளையை உபயோகப் படுத்தி, சமாளிக்கிறானோ, அவனுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கடவுளின் உதவியை நாம் 'அதிர்ஷ்டம்' என்றும் அழைப்போம்....
அதிர்ஷ்டவசமாக நடந்து விட்டது என்றும் கூறுவோம். ஆனால், நம்முடைய சொந்த முயற்சியால் தான், அந்த அதிர்ஷ்டமே வந்தது என நம்ப வேண்டும்.
சோம்பேறியாக இருந்தால், விதியின் மீது பழியைப் போட்டு விட்டு, தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதற்கும், இந்த நிலைமையில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?
நம்முடைய முயற்சியும் வேண்டும், எல்லாம் வல்ல இறைவனுடைய அருளும் வேண்டும்; இவை இரண்டும் வாழ்க்கை என்ற வண்டியின் இரண்டு சக்கரங்கள் ஆகும்.
ஒரு ஸ்லோகத்தில் என்ன அழகாக விவரித்திருக்கிறார்கள் பாருங்கள் :
உத்யமேன சித்யந்தி கார்யாணி ந மனோரதை:
ந ஹி சுப்தச்ய சிம்ஹஸ்ய பிரவிஷந்தி முகே ம்ருகா:
வனத்தின் ராஜவான சிங்கம் கூட, கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தால், அதற்குரிய இரை தானே வந்து அதன் முன் விழாது. முயற்சி செய்து, இரையைத் தேடி அலைய வேண்டும். இரை தேடும் கலையும், அதற்கு வேண்டிய வலிமையும் இருக்க வேண்டும். இவை, கடவுளுடைய அருளால் தான் கிடைக்கும். அலாரம் அடித்து விட்டதே.......! நம்முடைய முயற்சிகளை ஆரம்பிக்கலாமா?
- தொடரும்
சித்ரா நாராயணன்