ADDED : செப் 03, 2014 05:00 PM

நாட்டில் நல்ல வார்த்தைகள் காதில் விழுவது என்பது ரொம்பவே குறைந்து விட்ட காலம் இது. இந்த சமயத்தில், ஏதோ நாலஞ்சு நல்ல வார்த்தைகளை உங்கள் காதில் போட்டு வைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்
பஞ்ச 'வ'காரங்களில், வஸ்த்ரா (நல்ல உடை), வபுஷா (சிறந்த <உடல்கட்டு) என்ற இரண்டு 'வ'காரங்கள் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இப்போது, இன்னும் மூன்று 'வ'காரங்கள் பற்றி அலசுவோம்.
'வாசா' என்பது மிக முக்கியமான பண்பு. தமிழில் 'பேச்சு' என்று சொல்லலாம். இனிமையாக, அன்புடன், தாழ்ந்த குரலில் பேசும் மனிதர்களுடன் எவராவது கோபம் கொள்ள முடியுமா? . பிரியமான வார்த்தைகள் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். நடைமுறையில் பிரியமான வார்த்தைகளை அனுஷ்டிக்கும் நபர்களை, எல்லோரும் எப்போதும் மதிக்கிறார்கள், மரியாதை செலுத்துகிறார்கள். நல்ல பேச்சு வார்த்தைகளை கடைபிடிக்கும் உயர்ந்த மனிதர்கள், எப்பொழுதுமே சுலபமான பாஷையில் பேசுகிறார்கள்; எல்லாருக்கும் நன்றாகப் புரியும் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள்; தெளிவாகவும்,
ஆணித்தரமாகவும் உரைக்கிறார்கள்.
சரி...நல்ல உடுப்புகளும், உடல் வலிமையும், இனிமையான குரலும் மட்டும் இருந்தால் போதுமா? நல்ல 'வித்யா' ...அதாவது கல்வி, படிப்பறிவு நமக்கு மிகவும் தேவை.
படிக்காத ஒருவன் அவனது வீட்டிலும், ஒரு ஜமீன்தார் தனது கிராமத்திலும், ஒரு ராஜா தனது நாட்டிலும் மதிக்கப்படுகிறார்கள். ஆனால், நன்றாகப் படித்த வித்வான் எல்லா இடத்திலும் கொண்டாடப்படுகிறார். படிப்பு என்ற செல்வம் எல்லா செல்வங்களிலும் உயர்ந்தது. எடுக்க எடுக்க குறையாதது; திருடமுடியாது.
மேற்கூறிய நான்கு பண்புகளுடன் இன்னும் ஒரு 'வ'கார பண்பு மிகவும் முக்கியமானது.
நல்ல படிப்பு இருந்தாலும், உடல் கட்டு இருந்தாலும், வித விதமான ஆடைகள் அணிந்திருந்தாலும், வாழ்க்கையில் பணிவும், அடக்கமும் அத்தியாவசியமான ஒரு பண்பு ஆகும்.
இதை 'விநயம்' என்று சொல்லுகிறோம். தலைக்கர்வம் இல்லாமல், எல்லோரையும் மதித்து, பணிவுடன் இருக்கும் பொழுது, நாம் நோக்கிய ஐந்து 'வ'காரங்களை கொண்ட மனிதர் மிகப்பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டு மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார். நான்காவது 'வ'காரமான வித்யா என்ற படிப்பு, அறிவு. நமக்கு ஒழுங்கையும், பணிவு மனப்பான்மையையும் தருகிறது.
இந்த ஐந்து 'வ'காரங்களும் சேர்ந்த மனிதர்கள் இருக்க முடியுமா? நியாயமான கேள்விதான். சற்று சிந்தித்துப் பார்த்தால், உங்கள் முன்னால் நிச்சயமாக அந்த லட்சிய நபர் தோன்றுவார்.
உயர் நிலையை நாம் அடைவது கடினமல்ல. பஞ்ச (ஐந்து) பாண்டவர்களைப் போல, இந்த பஞ்ச 'வ'காரங்களை நாம் நன்றாக அறிந்துகொண்டு, கடைபிடித்தால், நாமும் உயர் மட்டத்திற்கு உயர்த்தப்படுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.
- தொடரும்