ADDED : ஜூலை 29, 2016 10:10 AM

ஆக. 5 ஆண்டாள் அவதார நாள்
'குறைவொன்றுமில்லாத கோவிந்தா' என்று ஆடிப்பூர நன்னாளில் அவதரித்த ஆண்டாள் திருப்பாவையில் பாடியதைக் கேட்டிருக்கிறோம். இது அவள் எழுதிய இருபத்தெட்டாவது பாசுரத்தில் வரும் வரி. 27 வது பாசுரத்தில் 'கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா' என்று அவனை நெய்சோறு சாப்பிட அழைக்கிறாள். 29வது பாட்டில், இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா” என்கிறாள். வரிசையாக மூன்று பாடல்களில் திருமாலை அவள் கோவிந்தன் என்ற திருநாமம் சொல்லி அழைக்கிறாள். முந்தைய பாடல்களில் 'மாமாயன், மாதவன், ஓங்கி உலகளந்த உத்தமன் (திரிவிக்ரமன்)
என்றெல்லாம் பல்வேறு திருப்பெயர்களால் அவரை அழைத்த ஆண்டாள், கோவிந்தனை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறார்கள். ஏன் கோவிந்த நாமத்தை உயர்த்திச் சொன்னாள் என்பதை நாம் ஆராய்ந்தாக வேண்டும்.
திருப்பதிக்குப் போனால் 'ஏழுமலையானே! வெங்கடேசா! சீனிவாசா! பாலாஜி' என்றா கூக்குரல் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் 'கோவிந்தா...கோவிந்தா...' என்ற சப்தம் தானே ஓங்கி ஒலிக்கிறது! அப்படி என்ன தான் மந்திரச் சொல் அது!
திருமாலுக்கு 12 நாமங்கள் (திருப்பெயர்கள்) விசேஷம். அவை கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர,
ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர ஆகியவை. இதனால் தான் இந்த 12 பெயர்களையும் சொல்லி, உடலின் 12 இடங்களில் வைஷ்ணவர்கள் திருமண் (நாமம்) இடுகிறார்கள். நாமங்களைச் சொல்லி இடுவதால் தான் நாமம் என்ற பெயர் ஏற்பட்டது. ஆக, நாமம் இடும் போது வருகிற சிறப்பு மந்திரமாக 'கோவிந்த' உள்ளது.
இது மட்டுமல்ல! 'அச்சுத, அனந்த, கோவிந்த' என்ற நாமாக்களை ஆசமனம் செய்கிற போது சொல்கிறார்கள். இதிலும் 'கோவிந்த' வருகிறது. இதனால் தான் ஆதிசங்கரர் பஜகோவிந்தம் பாடும் போது, 'பஜகோவிந்தம் பஜகோவிந்தம், பஜகோவிந்தம்' என்று மூன்று முறை எழுதியிருக்கிறார். ஒருவர் ஒரு விஷயத்தில் சத்தியம் செய்கிறார் என்றால் 'சத்தியம் சத்தியம் சத்தியம்' என்று மூன்று முறை சொல்லச் சொல்வது வழக்கம். அதுபோல 'கோவிந்தா' என்பதே மிக உயர்ந்த மந்திரச்சொல் என்பதால் ஆண்டாளும் அதை உயர்த்திப் பாடியிருக்கிறாள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் தேர் பவனி வரும் போது 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷம் விண்ணை முட்டும் அளவு எழட்டும். அது கேட்டு ஆண்டாளும், ரங்கமன்னாரும் நம்மை வாழ்த்தட்டும்.