ADDED : ஏப் 15, 2011 10:44 AM

திருவண்ணாமலையில் சிவன் மலையாய் காட்சியளிக்கிறார். அதுபோல, மகாவிஷ்ணு மதுரையில் அழகர்மலையாய் குடிகொண்டுள்ளார். இந்த மலையை 'விருஷபாத்ரி' என்பர். எமதர்மன் 'விருஷபம்' (காளை) என்னும் 'தரும ரூபத்தில்' மகாவிஷ்ணுவை நோக்கி, இத்தலத்தில் தவம் செய்ததால் இப்பெயர் வந்தது. மகாவிஷ்ணுவும் பேரழகுடன் சுந்தர புருஷனாக எமனுக்கு காட்சியளித்தார். தனக்கு காட்சியளித்த வடிவத்திலேயே அவ்விடத்தில் எழுந்தருளும் படி எமன் வேண்டிக் கொள்ள, பெருமாளும் அருள்புரிந்தார். அதனால் பெருமாளுக்கு 'சுந்தரராஜர்' என்னும் பெயர் வந்தது. 'அழகில் தலை சிறந்தவர்' என்று இதற்குப் பொருள். இம்மலையையும், மலையில் அமர்ந்த சுந்தரராஜப்பெருமாளையும் தரிசனம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். இம்மலையில் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் வாழ்வதாக பெரியாழ்வார் பாசுரத்தில் பாடியுள்ளார். மலையே திருமாலாகத் திகழ்வதால் சங்ககாலத்தில் மக்கள் அழகர்மலையை வணங்கி வந்ததாக பரிபாடல் கூறுகிறது.