ADDED : நவ 04, 2016 12:00 PM

திருக்கார்த்திகை டிச.12ல் கொண்டாடப்படுகிறது. அன்று கோவில்களில் சொக்கப்பனை ஏற்றப்படும். ஒரு பனைமரத்தை பூமியில் ஊன்றி, சுற்றிலும் ஓலைகளைக் கட்டுவார்கள். முருகன் அல்லது சிவன் பவனியாக சொக்கப்பனை ஏற்றும் இடத்துக்கு வருவர். அவருக்கு கற்பூர ஆரத்தி காட்டி, அந்த கற்பூரத்தை ஓலை மீது பற்ற வைப்பர். ஓலைகள் எரிந்து முடிந்ததும், பனையை கோடரியால் வெட்டி சாய்ப்பார்கள். எந்த திசை நோக்கி அந்த மரம் சாய்கிறதோ, அதற்கேற்ற பலன் அவ்வூருக்கு அந்த ஆண்டில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிழக்கு அல்லது மேற்கு நோக்கி விழுந்தால் மழை வளம் நன்றாக இருக்கும். வடக்கு நோக்கி விழுந்தால் ஊர் மக்களின் வருமானம் பெருகும் வகையில் தொழில் வளர்ச்சி ஏற்படும். தெற்கு நோக்கி விழுவது நல்லதல்ல.
சைவசமய புண்ணியகாலம் என்ற நூலில், சுட்டப்பனை என்ற சொல் திரிந்து சொக்கப்பனை என வழங்குவதாக சொல்லப்பட்டுள்ளது. பனை அல்லது உலர்ந்த தென்னை, கமுகு, வாழை ஆகிய மரங்களை நட்டு, சுற்றிலும் ஓலைகளைக் கட்டி அக்னி மூட்ட வேண்டும். அருகிலேயே பெரிய அளவில் மாவிளக்கு ஒன்றை ஏற்றியிருக்க வேண்டும். கொழுந்து விட்டு எரியும் ஜோதியை சிவன் அல்லது முருகன் வடிவமாகவும், திருவண்ணாமலை தீபமாகவும் கருதி வழிபட வேண்டும். சொக்கப்பனை எரிந்து முடிந்த பின் மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

