ADDED : மார் 27, 2021 04:20 PM

'மொல்லா' என்னும் பெண் புலவர் தெலுங்கில் எழுதியது மொல்லா ராமாயணம். 'மொல்லா' என்பது முல்லைப்பூவைக் குறிக்கும். கிருஷ்ண தேவராயரின் அவையில் இந்நுால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. வடமொழி ராமாயணத்தில் வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று இதில் இடம் பெற்றுள்ளது.
சீதையுடன் காட்டுக்குப் புறப்பட்ட ராமர், கங்கைக் கரையை அடைந்தார். ஓடக்காரனான குகனிடம், படகில் ஏற்றிக் கொண்டு ஆற்றைக் கடக்க உதவும் படி வேண்டினார். ராமர் மீது பக்தி கொண்ட குகனுக்கு பயம் தொற்றியது.
''சுவாமி....தங்களின் பாதத்துாசு பட்டதால் கல்லும் கூட அழகிய பெண்ணாக மாறியது. அது போல என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு என்ன செய்வேன்?'' எனக் கேட்டான். ராமரின் பாதத்தில் சிறு துாசு கூட இல்லாமல் நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் அதன்படியே கால்களைக் கழுவிய பின்னர் படகில் ஏறினார்.