
பணக்கார வீட்டு பிள்ளைகள், வி.ஐ.பி., வீட்டு பிள்ளைகளை செல்லமாக 'ராஜாக்குட்டி' என அழைப்பது வழக்கம். விநாயகரும் ராஜா வீட்டு குட்டி தான். உலகத்துக்கே ராஜாவான சிவனுக்கும், ராணியான பார்வதிக்கும் அவர் பிள்ளையல்லவா! அவ்வகையில், அந்த பெரிய வீட்டுப் பிள்ளையும் 'ராஜாக்குட்டி' ஆகிறார். ஏழை வீட்டு குழந்தைகளை யார் திட்டினாலும், கேட்க ஆளிருக்காது. ஆனால், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் சேஷ்டையே செய்தாலும் கூட, அவர்களை திட்டுவதற்கு பயம் இருக்கும். மீறி திட்டினால், அவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்து உண்டு, இல்லை என ஆக்கி விடுவார்கள். அதேநேரம், ஏதாவது கோணங்கித்தனம் செய்து, அவர்களை சந்தோஷப்படுத்தினால் கூட, ''இந்த மாமா நல்ல மாமா'' என பெற்றவர்களிடம் சர்டிபிகேட் கொடுத்து விடுவார்கள். பெற்றவர்களும் மனம் மகிழ்ந்து, தங்கள் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்தியவருக்கு வேண்டியதை செய்து கொடுப்பார் கள். அதனால் தான் ராஜாக்குட்டியான விநாயகரின் முன்பு தோப்புக்கரணம் போடுவது, தலையில் குட்டிக்கொள்வது போன்ற கோணங்கித்தனமான வேலைகள் செய்தாலும் அவர் அகம் மகிழ்ந்து, பெற்றோரிடம் சிபாரிசு செய்கிறார். அவரால் எல்லா நன்மையும் நடக்கிறது.