ADDED : ஆக 14, 2020 04:12 PM

ராமரைப் பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் உள்ளன.
''கூருகிர்ப் பருத்தின் ஏறுகுறித் தொரிஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக''
என்கிறது புறநானுாறு. அடைக்கலமாக வந்த புறாவைக் காக்கத் தன்னுயிர் ஈந்த சிபிச்சக்கரவர்த்தியின் தியாகம் கூறப்படுகிறது. இத்தகைய சிபியின் வழி வந்த சோழ பரம்பரையில் வந்த மாவளத்தான் மீது பாடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிற்காலச் சோழர்கள் 'சூரிய வம்சத்தில் தோன்றிய சிபியின் வழிவந்த ராமரின் வழித்தோன்றல்கள்' என தங்களை பெருமிதமாக சொல்வர்.
''தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதற்வற் பயந்தோன் என்பது
நீ அறிந் திலையோ நெடுமொழி அன்றோ?''
என்னும் சிலப்பதிகார பாடல் 'பிரம்மனைப் படைத்த திருமாலின் அவதாரமே ராமன்' என்கிறது. மேலும் ராமர் வரலாறு நெடுங்காலமாக தமிழர்களிடம் அறியப்பட்டு வருவதை 'நெடுமொழி' என்கிறது.
''நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொண்ர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு''
எனும் மணிமேகலை பாடல் மூலம் வானர சேனையின் உதவியுடன் இலங்கைக்கு ராமர் பாலம் கட்டிய செய்தி உள்ளது.
''மூவலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே''
என்னும் சிலப்பதிகார அடிகள் ராவணனை வென்ற ராமபிரானின் வீரத்தைப் போற்றுகிறது.
தமிழ் மக்களின் வழிபாட்டில் ராமர் சிறப்பிடம் பெற்றுள்ளார்.