ADDED : ஆக 13, 2020 03:14 PM

மதுராவில் உள்ள ஆயர்பாடியில் கிருஷ்ணர் பிறந்தார். இதையறிந்த ஆயர்கள் வாத்தியங்கள் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பசுக்கொட்டில்களிலும், வீதிகளிலும் கோபியர்கள் மாக்கோலமும், மஞ்சள், செஞ்சூரணத்தால் கோலமும் வரைந்தனர். வாசனை திரவியம் பூசியும், பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர். லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு மாலை சூட்டினர். மலர் அலங்காரம் செய்தனர். விதவிதமான ஆடைகள், காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகை என ஆபரணங்கள் அணிந்து நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றனர். கிருஷ்ணரைக் கண்டு, “வாசுதேவ கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீ எங்களைக் காத்தருள வேண்டும்'' என வேண்டினர். கிருஷ்ணரை பார்க்க வந்தவர்களுக்கு வளர்ப்பு பெற்றோரான நந்தகோபரும், யசோதையும் தானம் அளித்தனர்.
பூஜை முறை
கிருஷ்ண ஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு பழம் கொடுக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணருக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பால், தயிர், வெண்ணெய், அவல், நாவற்பழம், கொய்யாபழம், விளாம்பழம், வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம், வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பியை படைப்பர். கிருஷ்ணர் உடைய 108 போற்றி, அஷ்டோத்திரத்தை ஒருவர் படிக்க மற்றவர் சொல்லலாம். 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தீபாராதனை காண்பிக்க வேண்டும்.
எட்டாம் நாளில் பவுர்ணமி
இதென்ன அதிசயம்! தேய்பிறை எட்டாம் நாளில் கிருஷ்ணர் பிறந்தாரே! அந்நாளில் எப்படி பவுர்ணமி தோன்ற முடியும்? இதற்கான விளக்கம் தருகிறது கமானிக்யா என்ற நுால். அன்று வானமண்டலத்தில் எல்லா கிரகங்களும் பூரண சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும், கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் பவுர்ணமி போல நிலா பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தி கிருஷ்ணர் காட்சியளித்தார். கார்மேக வண்ணன் கிருஷ்ணர் மஞ்சள் பட்டாடையுடன் ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார். பெற்ற தாயான தேவகியும் தேவதை போல ஜொலித்தாள்.
ருக்மணி பூஜித்த கிருஷ்ணர்
பாலகனாக இருந்த போது கிருஷ்ணரின் வடிவழகைக் காண ருக்மணி ஆசைப்பட்டாள். தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் தெரிவித்தாள். அவரும் சாளக்ராம கல்லில் கிருஷ்ணர் சிலை வடித்தார். வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெய்யுமாக கிருஷ்ணர் சிலையை உருவாக்க அதை பூஜித்தாள். கர்நாடகாவிலுள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் அச்சிலையே மூலவராக உள்ளது.