ADDED : ஜூலை 24, 2020 09:16 PM

சங்க காலத்தில் சிவ வழிபாடு இருந்ததை புறநானுாறு, கலித்தொகை பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
''பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே''
என அவ்வையார் புறநானுாறு பாடலில் அதியமானைப் புகழ்கிறார்.
பால் போல வெண்ணிற பிறை சூடியவனும், ஆலகால நஞ்சை உண்டதால் நீலநிறக் கழுத்தை உடையவனுமான சிவனைப் போல நீயும் புகழுடன் வாழ வேண்டும் என்பது இதன் பொருள். கலித்தொகையில் 150வது பாடலில் சிவனைக் குறித்த பல செய்திகள் உள்ளன.
''பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி
அன்ன நின் நிறம்''
என்று சிவன் கங்கையை சடையில் தாங்கியவர், பொன்னிறம் உடையவர் என்றும்,
''உருவ ஏற்று ஊர்தியான் ஒளி அணி நக்கன்ன''
என காளை வாகனம் கொண்டவர்,
அழகிய சிரிப்பை உடையவர் என்றும்,
''புதுத் திங்கட் கண்ணியான் பொன்
பூண் ஞான்று அன்ன''
தலையில் வளர்பிறையைச் சூடியவர் என்றும்
''அரும் பெறல் ஆதிரையான் அணி பெற
மலர்ந்த பெருந் தண் சண்பகம் போல''
என திருவாதிரை நாளுக்கு உரியவர் , குளிர்ந்த செண்பகப் பூவை அணிபவர் என்றும் இப்பாடல் சிவனின் பெருமையை போற்றுகிறது.