
மனபலம் அதிகரிக்க...
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். அன்றைய நாளில் விரதம் இருந்தால் நமது மனபலம் அதிகரிக்கும். இதை சோமவார விரதம் என்றும் சொல்வர். சோமவாரம் என்றால் திங்கட்கிழமையைக் குறிக்கும். சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயரும் உண்டு. இந்த விரதத்தை முதன் முதலில் சந்திரன் அனுஷ்டித்து, சிவபெருமானின் அருளைப் பெற்றார்.
செல்வம் தேடி வர
கார்த்திகை முதல் திங்கள் தொடங்கி கடைசி திங்கள் அன்று விரதத்தை நிறைவு செய்யலாம். விரதம் இருப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடாமல், சிவபெருமானை வணங்கி சிவாஷ்டகம், சிவபுராணம் படிக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். பிறகு கோயிலுக்கு சென்று சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதம் இருப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் இன்னல் இல்லாமல் வாழ்வார்கள் என்கிறது கந்த புராணம்.
விரதத்தை எப்போது தொடங்கலாம்
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது. அவற்றுள் ஒன்று கார்த்திகை சோமவார விரதம். இவ்விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்கலாம். இதைத் தவிர சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமையிலும் தொடங்கலாம்.
விரத பலன்
* திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
* பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவர்.
* மனம், உடல் ஆரோக்கியம் பெறும்.
* தாயாருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் நீங்கும்.
சோமேஸ்வரரும் சோமனும்
ஒரு முறை தட்சனின் சாபத்தால் சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். தன் சாபம் நீங்க சிவனை வேண்டி, கார்த்திகை மாதம் அனைத்து திங்கட்கிழமையில் விரதம் இருந்தார் சந்திரன். இதனால் மகிழ்ந்தவர் சாப விமோசனம் அளித்தார். இப்படி நோய் நீங்கப் பெற்றதுடன் நவக்கிரகங்களில் ஒருவரானார் சந்திரன். அதோடு சிவனின் சடாமுடியில் இளம்பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றார். இதனால் சந்திர சேகரர், சந்திர மவுலீஸ்வரர், சோம சுந்தரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிதரர், சசி மவுலீஸ்வரர், சசிசேகரர் என்று சிவபெருமான் வழிபடப்படுகிறார்.
சந்திராஷ்டமமா... கவலை வேண்டாம்!
சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற தலங்களில் ஒன்று சோமநாதீஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் உள்ள இக்கோயில் சோழர்களின் கைவண்ணத்தில் உருவானது. அதுவும் குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த கோயில். இங்குள்ள ஈசனுக்கு 'சோமநாதர்' என்ற பெயர் உண்டு. அம்பிகை காமாட்சி எனும் நாமத்தோடு காட்சி தருகிறாள். சந்திரன் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சந்திராஷ்டமத்தால் சிரமப்படுபவர்கள் தரிசிக்க வேண்டிய கோயில் இது. திங்கட்கிழமை, பவுர்ணமி நாளில் இங்கு வந்தால் உங்களுக்கு மனபலம் கூடும். சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 33 கி.மீ., துாரத்தில் கோயில் உள்ளது.

