
ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. மனித வாழ்விற்கும் தாழ்விற்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் கிரகங்களே. இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன். பிரபஞ்சத்தையும், கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார். ஒருவரது ஜாதகத்தில் சூரிய பலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை, ஆட்சி, அதிகாரம் அமையும். ஆத்மா, தந்தை, தலை, சரீரம், உத்தியோகம், வலதுகண், வைத்தியம், தைரியம், புகழ், உடல்நலம் ஆகியவற்றுக்கு சூரியனே காரணகர்த்தா. தமிழ் மாதத்தின் முதல்நாள் இவர் ராசிவிட்டு ராசி மாறுவார். குரு ஆண்டிற்கு ஒரு முறையும், சனி இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறையும் மட்டுமே ராசி மாறும். ஆனால், சூரியன் மாதம் ஒரு முறை பெயர்ச்சியாகிவிடுவார்.
சித்திரையில் முதல் ராசியான மேஷத்தில் அடியெடுத்துவைக்கும் இவர், பன்னிருராசிகளையும் வலம் வருவார். பொங்கலன்று மகர ராசியில் நுழைவதால், இந்நாளை 'மகர சங்கராந்தி' என்பர். ஒருவருக்கு சூரியதசை 6 வருடம் நடக்கும். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் இவருக்குரியவை. தான் இருக்கும் இடத்தில் இருந்து 7வது ராசியைப் பார்ப்பார். குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு பார்வை ஏற்பட்டாலோ சூரியன் ஆன்மிக பலத்தை ஒருவருக்கு வழங்கி பக்தியில் ஈடுபடச் செய்வார்.