sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இமயத்தில் இருக்கும் குளிர்காற்று நம் இதயத்தை தொடுகிறது

/

இமயத்தில் இருக்கும் குளிர்காற்று நம் இதயத்தை தொடுகிறது

இமயத்தில் இருக்கும் குளிர்காற்று நம் இதயத்தை தொடுகிறது

இமயத்தில் இருக்கும் குளிர்காற்று நம் இதயத்தை தொடுகிறது


ADDED : அக் 13, 2017 11:31 AM

Google News

ADDED : அக் 13, 2017 11:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இமயம் என்பது மலையல்ல, தெய்வங்கள் நடமாடும் திருத்தலம். எத்தனையோ திருத்தலங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆலயம் இமயம். இறைவனின் கருணை ஜீவநதிகளாகவும், அவன் சுவாசம் வேதங்களாகவும் வெளிப்பட்ட இடம்.

“அரசியல் பிரிக்கிறது, ஆன்மிகம் இணைக்கிறது,'' என்பார் என் குருநாதர். சிறு சிறு நாடுகளாக இருந்தபோதும், பாரதத்தை ஒரு நாடாகச் சேர்த்து வைத்தது யாத்திரை தான். அரசர்கள் சண்டை போட்டு கொண்டிருந்தபோதும், அடியவர்கள் இமயத்திலிருந்து குமரி வரை சென்று வந்து கொண்டிருந்தனர்.

பாரதத்தின் அடிநாதம் ஆன்மிகம். அதன் சுருதியைக் காப்பாற்றி வருவது யாத்திரை. அதன் லயத்தைப்போற்றி வருவன கோயில்கள்.

பத்ரிக்கும், கேதாருக்கும் நுழை வாயிலாக இருப்பது ஹரித்துவார். ஹரன், ஹரி இருவருக்கும் அது 'த்வாரம்'அதாவது நுழைவாயில். இங்கு தான் கங்கை சமவெளியைத் தொடுகிறது. கங்கைக் குளியல் என்பது, தொலைந்து போன குழந்தை, தாயை அடைந்து மடியில் புரள்வது போலத்தான்.

ஒரு காலத்தில் யாத்திரையின் உச்சம் என்பது கேதாருக்குச் செல்வதே. (அப்போது திருக்கயிலைக்கு யாத்திரை செல்லும் பழக்கம் கிடையாது) கேதாருக்கு சென்றவர்கள் திரும்பி வரும் நோக்கத்தோடு சென்றதில்லை.

பாண்டவர்களும், பாஞ்சாலியும் அப்படித்தான் கேதாருக்குச் சென்றனர். பேசக் கூடாது, எது நடந்தாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதே விரதம். தேவப் பிரயாகைக்குப் பிறகு அவர்கள் உணவருந்தவில்லை. ருத்ர பிரயாகைக்குப் பின் நீர் கூட அருந்தவில்லை. ஓய்வெடுக்கவில்லை.

பாஞ்சாலியில் துவங்கி, ஒவ்வொருவராக விழுந்தனர். இந்த விரதத்திற்குப் பெயர் 'த்ருக் பதம்'. மவுனமும், ஒருமுகப்பட்ட சிந்தனையுமாய், உணவும் நீரும் இன்றி ஓய்வெடுக்காமல் நடக்கும்போது களைப்பின் உச்சியில் உடம்பு சிகரத்திலிருந்து விழும்; அது கீழே விழும் முன், ஆன்மா உயர்ந்த நிலையை அடையும். அறுவரில் தருமரே கேதாருக்குப் பின்னிருக்கும் ஸ்வர்க ஆரோஹண பர்வதத்தை அடைந்து உயர்நிலையை எய்தினார்.

ஹெலிகாப்டர் உட்படவசதிகள் வந்தாலும் 12,000 அடி உயரத்திலிருக்கும் கேதாருக்கு செல்வதில் இன்றைக்கும் சிரமம் இருக்கிறது. பிராணவாயு குறைந்த சூழல், குளிர், இயற்கை சீற்றம்... இவற்றைத் தாண்டி கேதார நாதனை தரிசிப்பது என்பது அவனுடைய அருளே.

ராம்பாடா கிராமம் வழியாக 16 கி.மீ., நடந்தோ, குதிரையிலோ, டோலியிலோ செல்வது மறக்க முடியாத அனுபவம்.

ஆர்ப்பரிக்கும் அலக்நந்தா நதி, மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கைக் காட்சிகள், இமயத்தின் பிரம்மாண்டம், நம்முடைய சிறுமை, எளிய, குறைந்த உணவு, அன்புடன் கூடி வாழ்தல், ஆர்வத்துடன் விழைவோருக்கு அகத்தில் ஆழ்ந்த அனுபவம், இவையே யாத்திரையில் கிடைக்கும் செல்வங்கள்.

மோட்சத் தலங்களில் முக்கியமானது கேதார். ஆன்ம விடுதலையை மட்டுமே இங்கு வேண்டுதலாக வைப்பர்.

கேதார் தரிசனத்துக்கு பிறகே பத்ரிநாத் செல்வதுண்டு. பத்ரிகாச்ரமம் என்று அதற்குப் பெயர். நர நாராயணர்கள் தவம் செய்த இடம். அதைக் குறிக்கும் வகையில் இரட்டைச் சிகரங்கள் உள்ளன. இந்தக்கோயில், அலக்நந்தா நதியின் கரையில் உள்ளது. பகவான் கண்ணன் இங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். 48 நாட்கள் விரதத்துடன தங்கி கண்ணனின் நேரடி தரிசனத்தை வேண்டுவர்.

கேதார் செல்லும் வழியில் கவுரி குண்டம் என்ற கந்தக (வெந்நீர்) ஊற்று இருக்கிறது.

பத்ரியிலும் இது உண்டு.

பத்ரியில் கோயில் அருகே இருக்கும் நீலகண்ட பர்வதம், கணபதியைப் போலவே காட்சி அளிக்கிறது. அங்கும் சரி, கேதாரிலும் சரி, கதிரவனின் முதல் கிரணங்கள் பனி முகடுகளைத் தொடும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.

நாம் உள்முகப்படவும், நம் அகப்பயணம் சீராகவும், பணிவு, எளிமை, தூய்மை, பிறருக்கு உதவுதல், எல்லாருடனும் நல்லுறவோடு வாழ்தல் போன்றவை வாய்க்கவும் யாத்திரை அவசியம். கேதார் இயற்கையின் சீற்றத்திற்குப் பிறகு மீண்டிருக்கிறது.

என்ன...! கிளம்புவதற்குத் தயாராகி விட்டீர்கள் தானே!

இசைக்கவி ரமணன்






      Dinamalar
      Follow us