
ஆண்டாள் திருப்பாவை என்னும் 30 பாசுரங்களைப் பாடினாள். கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டது. தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர். ஆண்டாள் சந்நிதி முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாகப் பாவித்து, கண்ணனை வேண்டிப் பாடிய சிற்பங்கள், பந்தல் அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது. திருப்பாவை காட்சிகளை கோயில் முன்மண்டபத்தில் ஓவியமாகவும் காணலாம். ஆண்டாள் சந்நிதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், 'முத்துப்பந்தல்' எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டு இருக்கிறது. மண்டபத்தின் மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.

