ADDED : அக் 27, 2016 03:05 PM

தேவர்களின் தந்தையான கஷ்யபர், விதிவசத்தால் ஒரு பெண்ணிடம் அடிமைப்பட்டார். அவளுக்கு பத்மாசுரன், சிங்கமுகாசுரன், கஜமுகாசுரன் உள்ளிட்ட ஏராளமான அரக்கப்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களை தவவாழ்வு நடத்தும்படி கஷ்யபர் எடுத்துச் சொன்னார். ஆனால் தாய் அசுர வம்சத்தை சேர்ந்தவள் என்பதால், தங்கள் பிள்ளைகளை அசுர குணங்களுடன் வளர்த்தாள். இவர்களில் பத்மாசுரன், சிவனை நினைத்து தவமிருந்தான். சிவன் அவன் முன் தோன்றியதும், அவரது ஆற்றலைத் தவிர வேறு எந்த சக்தியாலும், தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தை பெற்றான். அந்த வரத்தின் பலத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவனைச் சரணடையவே, அவர் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கினார். அவை ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி குழந்தைகளை அணைத்து ஒரே உருவமாக்கி 'கந்தன்' என பெயரிட்டாள். தன் சக்தியை ஒன்று திரட்டி, ஒரு வேலாக மாற்றி கந்தனுக்குப் பரிசளித்தாள். வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். ஆறு நாட்கள் நடந்த போரின் போது தேவர்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் அடிப்படையில், ஐப்பசி வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை விரதம் மேற்கொள்வர். சஷ்டியன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடக்கும். குழந்தை இல்லாதவர்கள், தம்பதியாக சஷ்டி விரதம் மேற்கொண்டால் நல்ல சந்ததி உண்டாகும். அக்.31ல் சஷ்டி விரதம் தொடங்குகிறது. இந்த நாட்களில் கந்தசஷ்டி கவசத்தை படித்து முருகப்பெருமானின் நல்லருளைப் பெறலாம்.

