ADDED : ஜூன் 07, 2021 08:08 PM

'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பார்கள். அதாவது சரணடைந்தவர்களை காக்க இன்றே ஓடிவருபவர் நரசிம்மர். இரண்யாசுரன் தானே பரம்பொருள் என செருக்குடன் அலைந்தான். அசுரனின் மகனான பிரகலாதன் விஷ்ணுவே பரம்பொருள் என வலியுறுத்தி வந்தான்.
ஒருமுறை இரண்யன் தன் மகன் பிரகலாதனிடம் ''எங்கேயடா உன் ஹரி'' என்று கோபமாக கேட்க அவன், 'எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறன்' என்று ஒரு துாணைக்காட்டினான். அந்த துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தப்படி, துாணை பிளந்து கொண்டு வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் இரண்யனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார். உக்கிரம் கொண்ட நரசிம்மரை, மகாலட்சுமியே சாந்தப்படுத்தினாள். அவளைத்தன் மடியில் வைத்தபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.