ADDED : ஏப் 18, 2010 01:22 PM

* பராசக்தி தாயே! மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேற வேண்டும். நல்ல சிந்தனைகளே மனதில் நிலைக்க வேண்டும். உறுதி மிக்க நெஞ்சமும், தெளிந்த நல்லறிவும் வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல உன் நெருங்கி வந்ததும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக வேண்டும்.
* புதுமைக்குப் புதுமையாகவும், பழமைக்குப் பழமையாகவும் இருப்பவளே! என் உயிரில் கலந்து விட்ட தாயே! உண்மையின் இருப்பிடமே! கவலை தீர்க்கும் மருந்தே! மலைமகளே! அன்னையே! அமுதம் போன்றவளே! காத்தருள்வாயாக.
* இருளைக் கிழித்தெழும் சூரியன் போல ஞானியர் நெஞ்சில் இருப்பவளே! என் செயலில், சிந்தனையில், அறிவில், மனதில் நின்று வழிநடத்திடு. உலக இன்பங்கள் யாவும் வேண்டி உன்னிடத்தில் நிற்கின்றேன். அழியாத அமுதம் போன்றவளே! என்னை அரவணைப்பாயாக.
* அற்புதங்கள் நிகழ்த்தும் தாயே! மின்னலைப் போன்றவளே! சிவசக்தித்தாயே! உன் திருவடித்தாமரைகளைச் சரணடைந்தேன்.
-பாரதியார்