/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்யசாய்
/
தவறை சுட்டிக்காட்டினால் மகிழுங்கள்
/
தவறை சுட்டிக்காட்டினால் மகிழுங்கள்
ADDED : ஜன 07, 2008 09:49 PM

* தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தவறு செய்யாது இருக்க வேண்டும்.
* வேலைப்பாடு அமைந்த பெரிய தேரையும் முட்டுக்கட்டை தவறான வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. அதுபோல உயர்ந்த கல்வியாளர் தவறான வழியில் சென்றால், சாதாரணமானவர்கள் திருத்தக்கூடும்.
* பிறர் தவறு செய்யும்போது மட்டும் நமது கண்கள் பூதக்கண்ணாடி அணிந்து கொள்கின்றன. வாய் ஒலிபெருக்கியாய் விடுகிறது.
ஆசான் தன்னைக் கண்காணிக்கிறான் என்று மாணவர்கள் அறிந்தால் குறும்பு செய்வது இல்லை. இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்று நாம் நம்பினால் தவறு செய்யமாட்டோம்.
* அடுத்தவர் உங்கள் தவறினைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடினால், இருமடங்கு மகிழுங்கள். மீண்டும் அந்தத் தவறு செய்யாவண்ணம் இருக்க அவர் உதவினார்.
* அறியாமையால் செய்த தவறுகளுக்கும், பாவங்களுக்கும் உண்மையாகப் பச்சாதாபப்படுங்கள். மறுபடியும் அந்தத் தவறுகளையோ, பாபங்களையோ செய்யாது இருக்க முயலுங்கள். சரியான பாதையிலேயே நீங்கள் போவதற்கு வேண்டிய பலத்தையும், தைரியத்தையும் உங்களுக்கு அருளும்படி ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
* உங்களுக்குத் தெரிந்து உங்களிடம் இல்லாத தவறுகள் பற்றி மற்றோர் எது சொன்னாலும் பொருட்படுத்தாதீர்கள். உங்களிடம் உள்ள தவறுகளை மற்றோர் உங்களுக்கு சுட்டிக்காட்டுவதற்கு முன்பே சரி செய்துவிட முயலுங்கள். உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது கோபமும், பழிவாங்கும் எண்ணமும் கொள்ளாதீர்கள். அதற்காக பதிலுக்கு அவர்களுடைய தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டாம்.
* தன்னம்பிக்கை என்பது தங்க பஸ்பம். அதுமட்டும் இருந்தால் ஆரோக்கியம் என்னும் ஆனந்தம் கிட்டும்.