ADDED : மார் 24, 2022 05:04 PM

அலாவுதீன் என்பவர் எங்கு போனாலும் பேருந்தில்தான் செல்வார். பைக் வாங்க காசு இல்லையென்றால் அப்படித்தானே செல்ல வேண்டும் என எண்ணாதீர்கள். அவர் நினைத்தால் மாடர்ன் பைக்கேயே வாங்கலாம். ஆனாலும் அவர் ஏன் நடந்து செல்கிறார் என்று தானே நினைக்கிறீர்கள். ரொம்பவும் யோசிக்காதீர்கள். நம்மைப்போல் அவரது அலுவலக நண்பர் ஆஷிக் அலிக்கும் இதே கேள்விதான்.
''டேய்... சொல்றேன்னு தப்பா நினைக்காத. என்னுடைய குடும்ப சூழல் நான் பைக் வாங்கவில்லை. நீ வாங்கலாமே. ஏண்டா இப்படி நடந்து போற. அலுவலகத்தில் உள்ளவர்கள் உன்னை கேலி செய்கிறார்கள்'' என ஆஷிக் கேட்டார்.
''நான் நிம்மதியாக இருக்கணும் என நினைக்கிறேன். அதான் வாங்கல'' என்றார்.
''பைக் வாங்குவதற்கும் நிம்மதிக்கும் என்னடா சம்பந்தம்'' எனக்கேட்டார் நண்பர்.
''அது உனக்கு புரியாது. அப்படியும் உனக்கு இதற்கான காரணம் தெரியணும்னா நீ பைக் வாங்கு. நான் கூட பணம் தருகிறேன்'' என்று சொல்லி பணத்தை கொடுத்தான் அலாவுதீன்.
அவனோ பணத்தை அரை மனதாக வாங்கினாலும், பைக்கை முழு மனதாக வாங்கினான்.
அன்று முதல் பைக்கில் சுற்ற ஆரம்பித்தான் ஆஷிக். பைக்கை பாதுகாப்பாக வைக்க தன் சக்திக்கு மிஞ்சிய பெரிய வீட்டிற்கு வாடகைக்கு சென்றான். நாட்கள் பறந்து சென்றன. பைக்கில் பறந்து கொண்டிருந்தவன், கடனில் மூழ்க ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் பைக்கை சர்வீஸ்கூட செய்ய முடியவில்லை.
இரண்டு வருடம் கழித்து அலாவுதீனின் வீட்டிற்கு சென்றவன், ''டேய்.. நண்பா எனக்கு கடன் தரலாமா'' என இழுத்தான். நடந்தது என்ன என்று கேட்பதற்குள் ஆஷிக் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது. பைக்கால் வந்த பிரச்னைகளை எல்லாம் சொல்லி முடித்தான்.
''இப்போதாவது நான் ஏன் பைக் வாங்கவில்லை புரிந்து கொண்டாயா ஆஷிக். முதலில் நம்ம யாரு, நமக்கு என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்யணும். நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க. அதையெல்லாம் பார்த்தா உன்னால வாழவே முடியாதுடா. அதுமட்டுமில்ல. பொருட்களை நீ சேர்த்துக்கிட்டே போனா உன் நிம்மதி குறைந்து கொண்டே போகும்.
இதுதான் உலக நியதி. இனியாவது பிழைக்கப்பாரு. கடன் எவ்வளவு இருக்குன்னு சொல்லு. அதை நான் அடைக்கிறேன். உனக்கு எப்போது வசதிபடுதோ அப்போது கொடுத்தால் போதும்'' என்றான் அலாவுதீன்.
பார்த்தீர்களா.. இன்று நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம். அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி கேட்டார் என்று பொருட்களை வாங்கி குவிக்கிறோம். அதனால் வீடும் நிரம்புகிறது. மனதில் பிரச்னையும் நிரம்புகிறது. இனியாவது பொருட்களை குறைத்து நிம்மதியை அதிகரிக்கலாமே.

