
வெள்ள சேதத்தில் இருந்து மக்களை காப்பாற்ற நபியான ஹஜ்ரத் நுாஹ் ஒரு கப்பலை கட்டினார்.
'இந்த மனிதருக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இந்த பகுதியில் மழை பெய்து பல வருடமாகி விட்டதே... எப்படி வெள்ளம் வரும்' எனக் கேலி செய்தனர். பின்னர் தினமும் கப்பலை தங்களின் காலைக்கடனுக்கு பயன்படுத்தினர்.
இதைப் பார்த்த நுாஹ், 'உனது கட்டளைப்படி கப்பல் கட்டினேன். ஆனால் இவர்களோ அசுத்தப்படுத்தி விட்டனர். இதை சுத்தப்படுத்த உதவி செய்வாயாக' என இறைவனிடம் வேண்டினார். இதற்கு தீர்வாக மக்களுக்கு சொறி, சிரங்கு நோயைக் கொடுத்தான். நாளடைவில் அவர்களின் உடல் முழுவதும் புண்ணானது. நோயை குணப்படுத்த மருந்து சாப்பிட்டும் பலனில்லை.
இரவு நேரத்தில் ஒருவன் மலம் கழிக்க கப்பலின் விளிம்பிற்கு சென்றான். கால் வழுக்கி விழ உடம்பெங்கும் மலமானது. யாருக்கும் தெரியாமல் குளித்தான். ஆனால் மறுநாளே அவனது உடலில் இருந்த புண்கள் மறைந்தன. இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்துடன் 'என்ன மருந்து பூசினாய்' என கேட்க நடந்ததை சொன்னான். அவ்வளவுதான். எல்லோரும் கப்பலுக்கு ஓடினர்.
கப்பல் சுத்தமானது. நோயும் மறைந்தது. இதன் பிறகு 'எல்லா உயிர்களையும் திரட்டிக் கொள்ளவும்' என அறிவிப்பு வந்தது. அனைவரும் கப்பலில் ஏற ஆரம்பித்தனர்.