வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழிய இருந்தது. அதில் இருந்து தப்பிக்க நபிகளில் ஒருவரான ஹஜ்ரத் நுாஹ் உள்ளிட்ட அனைவரும் கப்பலில் இரண்டு மாதம் பயணம் செய்தனர். பின் வானில் இருந்து வந்த கட்டளைப்படி கப்பலை விட்டு இறங்கி பூமியில் கால் வைத்தார்.
அந்நாள் மொகரம் மாதத்தின் பத்தாம் நாளாகிய 'ஆஷூரா' தினமாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூரியனை பார்த்ததால் அவர்களின் கண்கள் கூசின.
இதை சரிசெய்யவும், பார்வையின் சக்தி பெருகவும் கண்களில் சுர்மா(மை) இட்டுக் கொண்டனர். இதில் இருந்துதான் சுர்மா இடும் பழக்கம் வந்தது.
நுாஹ் மலையின் அடிவாரத்தில் வீடுகளை கட்டிக் கொண்டு வாழும்படி மக்களிடம் சொன்னார். அந்த புதிய நகரத்திற்கு 'மதீனதுஸ் ஸமானீன்' என பெயரைச் சூட்டினார்.
சிறிது காலத்துக்குப் பிறகு இப்பகுதியில் தொற்று நோய் பரவியது.
இதில் நுாஹ்ஹின் மனைவி, மகன்களான
ஹாம், ஸாம், யாபிஸ் ஆகியோரை தவிர மற்றவர்கள் இறந்தனர்.
இதனால் முதல் மகனுக்கு ஜன்ஜிபார், அபிசீனியாவையும், இரண்டாம் மகனுக்கு
ஈராக், ஈரான், குராஸான், சிரியாவையும், மூன்றாம் மகனுக்கு சீனா, துருக்கிஸ்தானையும் பங்கிட்டு கொடுத்தார் நுாஹ்.