
அப்துல் மாலிக் உழைக்காமலேயே வாழ்ந்ததால் பணம் கரைந்தது. சொத்து ஒவ்வொன்றாக விற்று வாழ்ந்தார். கடைசியில் இறந்தும் போனார். அவரது மகன் பஷீரும் தந்தையைப் போல பொறுப்பு இல்லாமல் இருந்தான். மிச்சம் இருந்த தோட்டம் ஒன்றை விற்க முடிவு செய்தான். இச்சமயத்தில் பஷீரின் வீட்டுக்கு அப்பாவின் நண்பர் வந்தார்.
''கவலைப்படாதே. உங்க தோட்டத்தில் ஏதோ ஒரு மரத்தின் அடியில் புதையல் இருக்கு. உங்க அப்பா என்னிடம் முன்பே சொல்லியிருக்கிறார். தோண்டிப்பார்'' என்றார் நண்பர்.
உடனே மண்வெட்டி, கடப்பாரையுடன் புறப்பட்டான். ஒவ்வொரு மரத்தின் அடியிலும் தோண்டிப் பார்த்தான். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. சில மாதங்கள் சென்றன. நண்பர் வீட்டுக்கு வந்தார்.
''ஏமாற்றி விட்டீர்களே'' என்றான் பஷீர்.
''தம்பி. உனக்கு உண்மை புரியவில்லை. இப்போது தோட்டத்திற்கு போ... புதையலைக் காண்பாய்'' என்றதும் ஓடினான். அங்கே முன்பு காய்ந்து இருந்த மரங்களில் பலமடங்கு பழங்கள் பழுத்துக் கிடந்தன.
அங்கு வந்த நண்பர், ''பார்த்தாயா... ஒவ்வொரு மரத்தின் அடியிலும் தோண்டியதால் கிடைத்த பலன் இது.
மழை பெய்யவே மரங்கள் தளிர்த்து விட்டன. இந்தப் பழங்களை விற்றால் பணக்காரனாகி விடுவாய். உழைப்பே உண்மையான புதையல். இனியாவது உழைத்து சாப்பிடு'' என்றார்.