நபிகள் நாயகமும், அவரது தோழரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வழியில் திடீரென வாகனம் குதிக்க ஆரம்பித்தது. பின்னால் அமர்ந்து இருந்த தோழர், '' நம் பயணத்தை கெடுக்க நினைக்கும் ஷைத்தானின் வலிமை அழிந்து போகட்டும்'' என்றார்.
அதற்கு நாயகம், ''அப்படி சொன்னால் ைஷத்தான் தன்னை பெரிய ஆளாக கருதி ஒரு வீட்டைப் போல நமக்கு தோன்றுவான். 'பிஸ்மில்லாஹ்' எனச் சொல்லுங்கள். சிறு ஈயைப் போல அற்ப பொருளாகி விடுவான்'' என்றார்.
அக்காலத்தில் தங்கும் இடம் என்பது சிறுகூடாரம் அல்லது மரத்தின் நிழல் மட்டும் தான். வீடு என்பது மிகப் பெரிய விஷயம். பிரம்மாண்டம் என்பதன் குறியீடாக 'வீடு' எனக் குறிப்பிடுகிறார். இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்மறையான விஷயங்களை, கற்பனைகளை மீண்டும் மீண்டும் நினைத்து மனம் பயப்படும். உதாரணமாக ஒரு நபருக்கு வயிற்று வலி. அது பற்றி தெரிந்தவரிடம் அவர் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். குடலில் பிரச்னையோ, அல்சரோ என பெரிதுபடுத்தி அவர் சொல்ல வயிற்றுவலியால் அவதிப்படுபவரும் கற்பனை பயத்தால் அவதிப்படுவார். இது தவறு. எந்த ஒரு விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் இயல்பாக அணுக வேண்டும். வீண்பயம் கூடாது.