
சிறுவனான அமீருக்கு சைக்கிள் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அண்டை வீட்டு ஆஷிக் புது சைக்கிள் வாங்கியதை அறிந்து ஓடி வந்தான். 'டேய். நான் ஓட்டுகிறேன்'' என சைக்கிளை வாங்கி ஓட்டி மகிழ்ந்தான்.
மறுநாளும் கேட்டதற்கு ஆஷிக் தர மறுத்து விட்டான். தனக்கு சைக்கிள் வாங்கித் தரும்படி தந்தையிடம் அமீர் கேட்டான். ''பணம் இல்லை... சீக்கிரம் வாங்கித் தருகிறேன்'' என்றார் அப்பா. 'நானே சைக்கிள் வாங்கினால் என்ன' என எண்ணி அம்மா தரும் காசை உண்டியலில் சேமித்தான்.
இதற்கிடையில் சில நாளாக பள்ளிக்கு வராத நண்பன் நாசரை காணச் சென்றான். 'என் அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. இரண்டு நாள் பெட்டில் இருக்க வேண்டும் என டாக்டர் சொல்லிட்டார். அதுக்காக பணம் ஏற்பாடு செய்ய எங்க அப்பா போயிருக்கார்' என்றான் வருத்தமுடன். சற்று யோசித்த அமீர் வீட்டுக்குச் சென்று, 'மருத்துவச் செலவுக்கு வச்சுக்கோ' என் நாசரிடம் உண்டியலைக் கொடுத்தான்.
''நன்றி'' என ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்தான் நாசர்.
''நன்றியை எனக்கு சொல்லாதே.இறைவனுக்கு சொல்லு. ஏனென்றால் அவன்தான் என்னை சேமிக்க வைத்துள்ளான்' என்றான் அமீர்.
இதையறிந்த அமீரின் அப்பா மகனை நினைத்து பெருமைப்பட்டார்.
''அப்பா... உங்க அனுமதி இல்லாமலே பணத்தை கொடுத்துட்டேன்; என்னை மன்னிச்சிடுங்க'' என்றான் அமீர்.
''உனக்கு நல்லதே நடக்கும்'' என வாழ்த்தினார் அப்பா.