தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அவரை சந்திக்க வந்த இளைஞன் ஒருவன், ''அறப்போருக்கு செல்லும் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்றான்.
அதற்கு அவர், ''உன் பெற்றோர் இருக்கிறார்களா'' எனக் கேட்டார்.
''ஆம். இருக்கிறார்கள்'' என்றான்.
''அப்படியானால் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய். அது போதும்'' என அறிவுரை கூறினார்.
இவனைப் போல மற்றொரு இளைஞன் வந்தான். நாயகத்திடம் படையில் சேர்க்கும்படி வேண்டினான்.
அவனிடம், ''பெற்றோரிடம் அனுமதி பெற்றாயா'' எனக் கேட்டார்.
''இல்லை. என் தாயார் அழுகிறார். சமாதானப்படுத்த முடியவில்லை. அவரது அழுகையை பொருட்படுத்தாமல் வந்து விட்டேன்'' என்றான்.
''உடனே வீட்டுக்குப்போ. தாயாரின் கண்ணீரைத் துடை'' எனக் கூறினார்.
பிறகு அங்கிருந்தோரிடம் நாயகம், 'பெற்றோரின் மகிழ்ச்சியில் தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்' என அறிவுறுத்தினார்.