'ஆது' சமுதாயத்தினர் ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்தனர். அதனால் அவர்கள் வாழ்ந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. இதை சரி செய்ய அவர்களில் 70 பேர் மெக்காவில் உள்ள கஅபதுல்லாஹ்வில் நின்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்கள் விரும்பியபடி கருப்பு மேகம் அப்பகுதிக்கு சென்றது. இதைக் கண்ட ஹஜ்ரத் ஹூத் (அலை) பதறியபடி, 'இந்த மேகம் வேதனையின் அடையாளம் ஆயிற்றே' என வருத்தத்தை தெரிவித்தார்.
அவர் சொன்னதைப் போலவே அந்த மேகத்தை தள்ளிக் கொண்டு வந்த காற்று புயலாக மாறி வீசியது. ஹஜ்ரத் ஹூத் தன்னைச் சார்ந்தவர்களை திரட்டி ஓரிடத்தில் உட்காரச் செய்தார். அவர்கள் இருந்த இடத்தில் காற்று மணம் கமழும் தென்றலாக மென்மையாக வீசியது. மற்றவர்களோ புயலில் சிக்கி அழிந்தனர். அப்பகுதியே நாசமானது. 'நல்லவேளை தப்பித்தோம்' என 70 பேரும் மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் தென்றல் புயலாக மாறி அவர்களையும் அழித்தது. மனிதன் ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்ற ஹஜ்ரத் ஹூத் நபியின் அறிவுரையை ஏற்காததால் நேர்ந்த விளைவு இது.