முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தார். ஒருநாள் தெருவில் போன பிச்சைக்காரனிடம், ''வீட்டில் சாப்பாடு நிறைய இருக்கிறது; தருகிறேன். அதை சாப்பிட்டு போ'' என்றார்.
பிச்சைக்காரனோ, ''நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன்.'' என்றான்.
''அடுத்த வேளைக்கு கொண்டு போ''
''அதற்கு இப்போதே ஏன் நான் கவலைப்படணும்''
இக்பாலுக்கு அப்போதுதான் புத்தியில் உறைத்தது. உண்மை புரிந்தது.
இந்த ஏழைக்கு இருக்கும் ஞானம் எனக்கு இல்லையே என வருந்தினார். பணியாட்களை அழைத்து, ''இன்று முதல் ஏழைகள் வயிறார சாப்பிட உணவு கொடுங்கள்'' என்றார் இக்பால்.
வெளியூர் சென்ற இக்பாலின் மனைவி வீட்டுக்கு வந்தாள்.
ஊரார் சாப்பிடுவதைக் கண்டு திடுக்கிட்டாள்.
''உங்களுக்கு என்ன பைத்தியமா! தானம் என்ற பெயரில் பணத்தை வீணாக்குகிறீர்களே'' என கோபப்பட்டாள்.
''எது நிரந்தரம்? எதுவரை நாம் உயிரோடு இருக்கப் போகிறோம்? தெரியாது. பணத்தை பெட்டியில் பூட்டி வைப்பதால் யாருக்கு லாபம்? பிறருக்கு கொடுத்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி. தானம் கொடுத்தால் நாலுபேராவது பசியாறுவார்கள்'' என்றார். உண்மையை உணர்ந்த மனைவியும் அமைதியானாள்.