நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான 'அல்பகரா' எனும் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார். வெளியே கட்டப்பட்டிருந்த குதிரை திடீரென மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினார். குதிரை அமைதியானது. மீண்டும் ஓதவே குதிரை மிரண்டது.
அந்நேரம் பார்த்து அவரது மகன் யஹ்யா குதிரையின் அருகே சென்றான். அது தன் மகனை காயப்படுத்தி விடுமோ என எண்ணி பக்கத்தில் சென்றார். அப்போது அவர் வானத்தில் அதிசயம் ஒன்றைக் கண்டார். விளக்குகள் நிறைந்த மேகம் போல வெளிச்சம் தோன்றி மறைந்தது. மனமோ படபடத்தது. துாக்கம் வரவில்லை. விடிந்ததும் நாயகத்திடம் சென்று நடந்ததை கூறினார்.
அதற்கு அவர், ''உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தான் அவர்கள். நீ தொடர்ந்து ஓதியிருந்தால் ஒளி மறைந்திருக்காது. காலையில் மக்களும் பார்த்திருப்பார்கள்'' என்றார்.