ADDED : செப் 12, 2025 07:51 AM
சூபி (ஞானி) ஒருவர் சென்று கொண்டிருந்த போது அவருக்கு எதிரே வந்தவர், ''உங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது. எங்கிருந்து வருகிறீர்கள்'' எனக் கேட்டார்.
''எனக்குன்னு ஊர் இல்லப்பா. எல்லா இடத்துக்கும் போவேன்'' என்றார் சூபி.
''சரி. எனக்கு பதில் சொல்வீர்களா'' எனக் கேட்டார் அந்த நபர்.
''தயங்காமல் கேள்'' என்றார் சூபி.
''இறைவன்தான் எல்லாருக்கும் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே. ஆனால் நாங்கள் தானே உங்களுக்கு உணவு தருகிறோம்.
அப்படி இருக்கும்போது அவன் தருவதாகச் சொல்வது நியாயமா'' எனக் கேட்டார்.
அதற்கு சூபி, ''இல்லை. அனைவருக்கும் அவனே உணவு கொடுக்கிறான்'' என்றார்.
''உங்களை ஒரு அறையில் அடைத்து வைக்கிறேன். உங்களுக்கு எப்படி உணவு கிடைக்கிறது என பார்ப்போம்'' எனச் சொல்லி அறையைப் பூட்டினான். இரவும் வந்தது. பசியால் சூபி அவதிப்படுவார் என நினைத்து சென்றவருக்கு, அங்கு நடந்ததை பார்த்து ஆச்சரியம் வந்தது.
முதன் முதலாக பார்த்த போது சூபி எப்படி இருந்தாரோ, அதைப் போலவே அப்போதும் இருந்தார். அவரது முகத்தில் சோர்வு இல்லை. ''எப்படி காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கிறீர்கள்'' எனக் கேட்டார்.
''இல்லையே. நான் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்'' என்றார் சூபி.
ஒன்றும் புரியாமல், ''என்ன சொல்கிறீர்கள்'' எனக் கேட்டார்.
''ஆம்... காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். இதுவும் அவன் கொடுத்ததுதானே''
உண்மையை உணர்ந்து, ''என்னை மன்னியுங்கள். அறிவுக்கண்ணை திறந்தீங்க...'' என நெகிழ்ச்சியுடன் கூறினார் அந்த நபர்.
''நீ கொடுக்கும் உணவுக்கும் அவனே அதிகாரி'' எனச் சொல்லி விட்டு புறப்பட்டார் ஞானி.

