இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக். ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு பெரியவர் வந்தார். ''எனக்கு ரொம்ப பசிக்குது. பணம் தாங்க'' எனக் கேட்டார்.
''என்னங்க முகத்தில என்ன காயம்' எனக் கேட்டான் ஆஷிக்
''திருடன் ஒருவனை விரட்டிச் சென்றேன். அதனால் ஏற்பட்ட காயம்'' என்றார் பெரியவர்.
''சரி...'' என கையில் இருந்த ரூபாயைக் கொடுத்தான் ஆஷிக்.
மீண்டும் அவர், ''தம்பி. இன்னும் பணம் கொடுங்கள். நாளை என் மகனுக்கு ஆப்பரேஷன்'' என்றார். ஆஷிக் மேலும் பணம் கொடுத்தான். அப்போது அவர் பணத்தை திருப்பி அனுப்புவதாகச் சொல்லி, அவனுடைய அலைபேசி எண்ணை வாங்கிச் சென்றார்.
மறுநாள் ஆஷிக்கின் அலைபேசி ஒலித்தது. ''நான் எஸ்.ஐ., பேசுறேன். உடனடியா போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க'' என அழைப்பு வந்தது. பதறியபடி பைக்கில் பறந்தான் ஆஷிக். அங்கு பணஉதவி கேட்ட பெரியவர் இருந்தார். அருகில் நின்ற இன்ஸ்பெக்டர், ''நீங்கதான் ஆஷிக்கா'' எனக் கேட்டார்.
''ஆமாம் சார்''
''ஏம்பா... உனக்கு அறிவு இல்லையா. யாரு என்னன்னு தெரியாம உதவி செய்வியா. நேத்து உன்னிடம் பணம் வாங்கிய இவன் ஒரு திருடன். எங்கிட்ட இருந்து தப்பிச்சு போற வழியிலதான் உன்னிடம் வந்திருக்கான். பஸ் ஏறும் போது மடக்கிப் பிடிச்சுட்டோம். நடந்ததை அவன் தான் சொன்னான். இந்த மாதிரி இனி செய்யாதப்பா'' என்றார் இன்ஸ்பெக்டர்.
ஆஷிக்கிற்கு துாக்கி வாரிப்போட்டது. எதையும் அப்படியே நம்பாதே; யோசி.

