
பாபில் நகரை தலைநகராக கொண்டு கொடுங்கோல் மன்னர் நம்ரூத் ஆட்சி செய்தார். பெரிய நட்சத்திரம் ஒன்று வானில் உதயமாக, அதன் ஒளியால் மற்ற நட்சத்திரங்களின் ஒளி குறைவதை கனவில் கண்டார். அறிஞர்களிடம் அதன் பலன் பற்றி விசாரித்த போது, ''பிறக்க இருக்கும் குழந்தை ஒன்றினால் அவனது ஆட்சிக்கு ஆபத்து உண்டாகும்'' என்றனர்.
''எங்கே... எப்போது குழந்தை பிறக்கப் போகிறது'' என பதறினார்.
''இதே பாபில் நகரில் தான் பிறக்கப் போகிறது'' என்றனர்.
பெருமூச்சு விட்டபடி, ''அக்குழந்தை எப்போது கருத்தரிக்கும்'' எனக் கேட்டான் நம்ரூத்.
''இந்த ஆண்டிலேயே அந்த குழந்தை பிறக்கும்'' என்றனர்.
''அதுசரி. அந்தக் குழந்தையால் என்ன தீங்கு விளையும்''
''அக்குழந்தை பெரியவன் ஆனதும் புதிய மார்க்கத்தை ஏற்படுத்தும். அதன் பின் உங்களின் ஆட்சியும், செல்வாக்கும் சரியும்'' என்றனர்.
கோபத்தில் நம்ரூத், ''இந்த பூமியில் அவன் அடியெடுத்து வைக்காதபடி செய்கிறேன். வீரர்களே... இந்த ஆண்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொல்லுங்கள்'' என ஆணையிட்டான்.

